காத்மாண்டு: நேப்பாளத்தில் அரசாங்கத் துறை, கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் வேலை நாள்கள் வாரந்தோறும் ஐந்து நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) அறிவிக்கப்பட்டது.
மத்திய கிழக்குப் பூசலால் ஏற்பட்டுள்ள எரிசக்தித் தட்டுப்பாடு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை நேப்பாளத்தில் அத்துறைகளில் சனிக்கிழமைகள் மட்டும்தான் ஓய்வு நாளாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இந்த வாரத்திலிருந்து இரண்டு வார இறுதி நாள்களும் விடுமுறை நாள்களாக இருக்கும் என்று அரசாங்கப் பேச்சாளர் சஸ்மிட் போக்கரல், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“எரிசக்தி விநியோகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையைச் சமாளிக்க அரசாங்கத் துறை வேலையிடங்கள், கல்விக் கழகங்கள் இரண்டு நாள்களுக்கு மூடியிருக்கும்,” என்று திரு போக்கரல் கூறினார். இதனையடுத்து நேப்பாளத்தில் அரசாங்க அலுவலகங்கள் இனி திங்கள் முதல் வெள்ளி வரை காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை இயங்கும்.
30 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள நேப்பாளம், படிம எரிபொருளுக்குக் கிட்டத்தட்ட முழுமையாக இந்தியாவைச் சார்ந்திருக்கிறது. அதனால் அனைத்துலக அளவில் எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டால் நேப்பாளம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியம் இருக்கிறது.
இம்மாதம் இரண்டாம் தேதி நேப்பாளம், விமான எரிபொருள் விலையைக் கிட்டத்தட்ட இரு மடங்காக்கியது.

