பாத்தாமில் முடங்கிய எரிசக்தி ஆலை பணிகள்

பாத்தாமில் முடங்கிய எரிசக்தி ஆலை பணிகள்

2 mins read
2bb1b643-632c-43ce-ab57-f02bfc1acce7
பாத்தாமில் உற்பத்தியாகும் சூரியசக்தி 2028ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: சன்சீப் குழுமம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாத்தாம் தீவிலிருந்து சிங்கப்பூருக்கு சூரிய சக்தியை இறக்குமதி செய்யும் திட்டத்தில் ஒரு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

ஜகார்த்தாவின் புதிய உரிம விதிமுறைகளின்கீழ் சூரிய சக்தி ஆலைகளை அமைப்பதற்கான திட்டத்தில் நியமிக்கப்பட்ட மின்சார ஏற்றுமதியாளர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

பாத்தாமுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சூரிய சக்தி திட்டம் குறித்து இருநாடுகளும் பல்வேறு ஒப்பந்தங்களை 2023ஆம் ஆண்டு செய்துகொண்டன.

அதன் அடிப்படையில் பாத்தாமில் சூரிய சக்தி ஆலைகளை அமைத்து அங்கு உற்பத்தியாகும் எரிசக்தியைச் சிங்கப்பூருக்கு விற்பனை செய்யும்படி பல்வேறு இந்தோனீசிய, பன்னாட்டு நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டன.

பல பில்லியன் டாலர் மதிப்பிலான அந்தத் திட்டம் 2028ஆம் ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஒரு சூரிய சக்தி ஆலையின் கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. திட்டத்துக்கான நிதியை உறுதிசெய்வதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

குறிக்கப்பட்ட காலத்துக்குள் திட்டத்தை நிறைவேற்ற அவற்றின் கட்டுமானப் பணிகள் இந்நேரம் தொடங்கியிருக்கவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

வங்கியிடமிருந்து பெருந்தொகையைக் கடனாக வாங்குவதில் நிறுவனங்கள் சவாலை எதிர்கொண்டுள்ளதாக நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.

இயற்கை எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை அவற்றின் உரிமத்தைப் புதுப்பிக்கும்படி இந்தோனீசிய எரிசக்தி, கனிமவள அமைச்சு குறிப்பிடுகிறது.

அதன்படி மின்சார ஏற்றுமதி உள்நாட்டு விநியோகத்தைப் பாதிப்பதாகத் தென்பட்டாலோ, மின்சாரத் துண்டிப்பை ஏற்படுத்தினாலோ அரசாங்கம் அந்த உரிமத்தை ரத்து செய்யலாம் அல்லது அனுமதிக்கப்பட்ட ஏற்றுமதி உச்சவரம்பை வெகுவாகக் குறைக்கலாம்.

இத்தகைய நிச்சயமற்ற சூழலால் சூரிய சக்தி ஆலைகளை அமைப்பதில் நிறுவனம் தாமதம் காட்டிவருவதாக நிபுணர்கள் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்