யுஏஇ போரில் நுழைந்தால் துபாய்க்குப் பெருத்த சேதம்: அமெரிக்கப் பொருளியல் நிபுணர் எச்சரிக்கை

யுஏஇ போரில் நுழைந்தால் துபாய்க்குப் பெருத்த சேதம்: அமெரிக்கப் பொருளியல் நிபுணர் எச்சரிக்கை

படம்: சிங்கப்பூர் பொருளியல் சங்கம்

30 Mar 2026 - 5:29 pm

1 mins read

புதுடெல்லி: மத்திய கிழக்குப் போரில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) நுழைந்தால், துபாய்க்கும் அபுதாபிக்கும் பெரும் ஆபத்து நேரிடும் என்று முன்னணி அமெரிக்கப் பொருளியல் நிபுணர் ஜெஃப்ரி சேக்ஸ் எச்சரித்துள்ளார்.

இந்த நகரங்கள் சுற்றுலாத் தலங்களாக வடிவமைக்கப்பட்டவையே தவிர, ராணுவக் கோட்டைகள் அல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஓர் ‘அர்த்தமற்ற குழப்பத்தில்’ சிக்கியுள்ளதாக டாக்டர் சேக்ஸ் வாதிட்டார். அமெரிக்கா, இஸ்ரேலுடனான அதன் இணக்கமான போக்கு, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தவறுகளைத் தொடரச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அடிப்படையில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போரில் இறங்கினால் துபாய்க்கும் அபுதாபிக்கும் பெருத்த சேதம் ஏற்படக்கூடும். இவை, உல்லாச விடுதிகளும் சுற்றுலாத் தலங்களும் நிறைந்த பகுதிகள். இவை, ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்கும் பலமான ராணுவ அரண்கள் கொண்ட இடங்கள் அல்ல.

“பணக்காரர்கள் களித்திருக்கவும் முதலீடு செய்யவும் செல்லும் இடங்கள் இவை. இத்தகைய சூழலில் ஒரு போர் மண்டலத்திற்குள் நுழைவது என்பது, துபாய் போன்ற ஓர் இடத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும். ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தெரிந்துகொண்டே ஒரு மோசமான சூழலில் சிக்கியுள்ளது,” என்று டாக்டர் சேக்ஸ் எச்சரித்தார்.

நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க அறிவுரை

தோற்றுப்போகும் ஒரு விஷயத்திற்காகத் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்காமல், நிலைமையைப் புரிந்துகொண்டு நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
யுஏஇதுபாய்அபுதாபிபோர்ஈரான்மத்திய கிழக்குஅமெரிக்கா