கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் உத்தரவை அமல்படுத்துவதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ நீதிமன்ற ஆவணத்தைத் தயாரிப்பதில், எந்த அளவிற்குத் துல்லியமும் ஆய்வும் கடைப்பிடிக்கப்பட்டது என்பது குறித்து அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி முகம்மது டுசுக்கி மொக்தார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் அந்த ஆவணத்தைச் சரிபார்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், நஜிப்பின் வீட்டுக்காவல் தொடர்பான பிரச்சினை எழுந்திருக்காது என்று திரு முகம்மது டுசுக்கி கூறியதாக மலேசியாவின் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமரின் தண்டனை தொடர்பான கோலாலம்பூர் உயர் நீதிமன்ற விடுவிப்பு ஆவணத்தில் உள்ளதாகக் கூறப்படும் குறைபாடுகள் குறித்து கருத்து தெரிவித்தபோது அவர் அவ்வாறு கூறினார்.
பெரித்தா ஹரியான் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் மிகவும் வெளிப்படையானவை என்றும் நாட்டின் சட்ட அமைப்பிற்குள் இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்றும் சொன்னார்.
சுட்டிக்காட்டப்பட்ட அந்தக் குறைபாடுகள், அந்த ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சட்டச் சொற்றொடர்கள், சட்டப்பிரிவுகளின் துல்லியத்தன்மை ஆகியவற்றுடன் தொடர்பானவையாகும்.
அந்தக் குறைபாடுகள் குறித்து முகம்மது டுசுக்கி விரிவாக விளக்கவில்லை என்றாலும், அந்த உத்தரவை அமல்படுத்துவதில் எழும் சட்ட ரீதியான கேள்விகள் குறித்து அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் முன்னரே கோடிகாட்டியிருந்தது.
‘எஸ்ஆர்சி’ வழக்கின் தண்டனை இன்னும் நடைமுறையில் இருப்பதாகக் கருதப்பட்டால், அதன் மீதமுள்ள காலத்தை நிபந்தனை அடிப்படையிலான பொதுமன்னிப்புக்கு உட்பட்டுத்தான் கழிக்க வேண்டும் என்று தலைமைச் சட்ட அலுவலகம் தெரிவித்தது.
இருப்பினும், நஜிப்பின் ‘எஸ்ஆர்சி’ வழக்கிற்கான சிறைத் தண்டனை சட்டபூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக நீதிமன்றம் முடிவு செய்தால், 1எம்டிபி வழக்கிற்கான அவரது தனிப்பட்ட 15 ஆண்டுகால சிறைத் தண்டனை இப்போது தொடங்க வேண்டுமா என்பதை நீதிமன்றமே தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், ‘எஸ்ஆர்சி’ தண்டனைக் காலம் முழுமையாக முடிந்த பின்னரே அந்த 15 ஆண்டு தண்டனைக்காலம் தொடங்க வேண்டும் என்று முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்ததாக அது கூறியது.
