தாய்லாந்து-கம்போடிய எல்லையில் பெரிதாகிவரும் சண்டை

2 mins read
1225995b-e6d2-44e7-a5ed-c4e16f177db8
கம்போடியா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் வெடித்துள்ளதை அடுத்து, கம்போடியாவின் ஆடர் மியான்ச்சி பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பேங்காக் / நோம் பென்: தாய்லாந்து, அதன் எல்லைப் பகுதியிலிருந்து கம்போடியப் படையினரை வெளியேற்ற நடவடிக்கைகளை எடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் மூண்ட சண்டை பல இடங்களுக்கும் பரவி வருகிறது.

தாக்குதலுக்கு இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றைக் குறைசொல்கின்றன. இதற்கு முன்னர், கம்போடியாவும் தாய்லாந்தும் இவ்வாண்டு (2025) ஜூலை மாதம் ஐந்து நாள் சண்டையிட்டன. மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சமரசப் பேச்சின் காரணமாக இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள அக்டோபரில் இணங்கின. சண்டை நிறுத்தம் எட்டப்படுவதில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் முக்கியப் பங்காற்றினார்.

திங்கட்கிழமையிலிருந்து (டிசம்பர் 8) நடந்த தாக்குதல்களில் குடிமக்களில் ஒன்பது பேர் மாண்டதாகக் கம்போடியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. 20 பேர் கடுமையாய்க் காயமடைந்ததாகவும் அது கூறியது.முரட்டுத்தனமான, சட்டவிரோதமான செயல்களில் தாய்லாந்து ஈடுபட்டதாகக் கம்போடியத் தற்காப்பு அமைச்சு குற்றஞ்சாட்டியது.

இதற்கிடையே சண்டையில் தாய்லாந்துப் படைவீரர்கள் மூவர் மரணமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 29 பேர் காயமுற்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தாய்லாந்தின் கடலோர மாநிலமான ட்ராட்டிற்குள் கம்போடியப் படையினர் நுழைந்ததாகத் தாய்லாந்து ராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. அவர்களை வெளியேற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கை தெரிவித்தது. இருப்பினும் மேல் விவரங்களை அது தரவில்லை.

அண்மை மோதல் குறித்துக் கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட் கருத்துரைத்தார்.

“அரசுரிமையைக் காரணங்காட்டி, குடிமக்கள் தங்கியிருக்கும் கிராமங்களைத் தாக்குவதற்குத் தாய்லாந்து அதன் ராணுவத்தைப் பயன்படுத்தக்கூடாது,” என்றார் அவர்.

கம்போடியா, அதன் படையினர் தொடர்ந்து தாக்கப்பட்டபோதும் பதிலடி கொடுக்கவில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தது.

தாய்லாந்து, அதன் எல்லையோரத்தில் அமைந்துள்ள ஐந்து மாநிலங்களிலிருந்து கிட்டத்தட்ட 438,000 பேரை வெளியேற்றியதாகச் சொன்னது. கம்போடியாவிலும் பல்லாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு தரப்புக்கும் இடையிலான எல்லைப் பகுதியின் நீளம் 817 கிலோமீட்டர். அதன் தொடர்பில் அவற்றுக்கு இடையில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அவ்வப்போவது பூசல் தலைதூக்குவது வழக்கம்.

குறிப்புச் சொற்கள்