தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய பேங்காக் கடைத்தொகுதிக்கு மக்களை சுண்டியிழுக்கும் மின்படிகள்

2 mins read
சிங்கப்பூர் கடைத்தொகுதிகள்போல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து
3286720f-cefc-4e4d-9771-ad6ae371832b
கடைத்தொகுதியின் மையப் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் எட்டு மின்படிகள், வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கின்றன. - படம்: சென்ட்ரல் பார்க் பேங்காக்/ஃபேஸ்புக்

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் புதிதாகத் திறக்கப்பட்ட கடைத்தொகுதியின் பிரதான கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் எட்டு மின்படிகள், புகைப்படம் எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், சமூக ஊடகவாசிகளின் ஈர்ப்பு மையமாக மாறியுள்ளன.

இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டுவரும் இந்த மின்படிகளின் புகைப்படங்கள், தங்களின் சொந்தப் படங்களை எடுக்க மேலும் பலரை இந்தக் கடைத்தொகுதிக்கு ஈர்க்கின்றன.

சென்ட்ரல் பார்க் பேங்காக் கடைத்தொகுதி, 46 பில்லியன் பாட் (S$1.85 பில்லியன்) மதிப்புள்ள டூசிட் சென்ட்ரல் பார்க் பல பயன்பாட்டுத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

இந்தக் கடைத்தொகுதி, பேங்காக்கின் மத்திய வர்த்தக வட்டாரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்தக் கடைத்தொகுதி, அதன் முதல் கட்டத்தை செப்டம்பர் 4ஆம் தேதி திறந்தது. முதல் நாளிலேயே 70,000க்கும் மேற்பட்டோரை இது ஈர்த்தது. மின்படிகளைக் காட்டும் சில முதல் புகைப்படங்கள் உடனடியாகப் பரவி, மக்களிடையே பேரார்வத்தைத் தூண்டின.

செப்டம்பர் 11ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில், சென்ட்ரல் பார்க் பேங்காக் கடைத்தொகுதியில் வாடிக்கையாளர்கள்.
செப்டம்பர் 11ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில், சென்ட்ரல் பார்க் பேங்காக் கடைத்தொகுதியில் வாடிக்கையாளர்கள். - படம்: ஏஎஃப்பி

மின்படிகள் அவற்றின் வடிவமைப்புக்காக தனித்துவமாக நிற்கின்றன என்றும் அவற்றின் சுற்றுப்புறத்தில் திறந்தவெளி இருப்பதால் புகைப்படங்கள் பிரமாண்டமாகவும் அற்புதமாகவும் தோற்றமளிக்கின்றன என்றும் வாடிக்கையாளர்கள் கூறினர்.

ஜப்பான், சிங்கப்பூர் அல்லது தென்கொரியாவில் உள்ள கடைத்தொகுதிகளின் சூழலை இது ஒத்திருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

டிக்டாக், இன்ஸ்டகிராமில் பதிவிடப்பட்ட படங்கள் பேரளவில் விருப்பக் குறிகளைப் பெற்றுள்ளன. இதனால், இங்கு வந்து புகைப்படம் எடுக்க மேலும் பலரை இப்படங்கள் ஊக்கப்படுத்துகின்றன.

மென்மையான பீச் நிறச் சுவர்கள், பிரகாசமான வெள்ளை நிற மின்படிக் கைப்பிடிகளுடன் மாறுபட்டுத் தெரிவதுடன், இயற்கையான மற்றும் செயற்கை ஒளியால் மேலும் அழகாகக் காட்டப்பட்டு, ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்துகின்றன.

குறிப்புச் சொற்கள்