கெய்ரோ: காஸா மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணிகளை அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறநிறுவனம் புதன்கிழமையன்று (ஜூன் 4) தற்காலிகமாக நிறுத்தியது.
காஸா மக்களின் பாதுகாப்பை இஸ்ரேல் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அது இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
அண்மையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் மாண்டனர்.
தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட வேண்டும் என்றும் குழப்பம், அபாயம் ஆகியவற்றைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறநிறுவனம் கேட்டுக்கொண்டது.
“அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் தொடர்ந்து முன்னுரிமை வழங்குகிறோம்,” என்று அறநிறுவனம் கூறியது.
இதற்கிடையே, அறநிறுவனம் முகாம்களை அமைத்துள்ள இடங்களுக்கு இட்டுச் செல்லும் பாதைகளைத் தவிர்க்கும்படி பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை போர் நடைபெறும் பகுதிகள் என அது கூறியது.
அறநிறுவனத்துக்குச் சொந்தமான உணவு விநியோக முகாமுக்கு அருகில் கூடிய கும்பலை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கும்பல் அபாயகரமானது எனக் கருதப்பட்டதாக அது கூறியது.
அந்தத் தாக்குதலில் குறைந்தது 27 பேர் மாண்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.
அச்சம்பவம் தமது முகாமுக்கு அருகில் நடக்கவில்லை என்று அறநிறுவனம் கூறியுள்ளது.