விமானச் சேவைத் தாமதத்துக்காகத் தொடர்ந்து இழப்பீடு வழங்கவுள்ள ‘இயு’ நாடுகள்

விமானச் சேவைத் தாமதத்துக்காகத் தொடர்ந்து இழப்பீடு வழங்கவுள்ள ‘இயு’ நாடுகள்

1 mins read
285a9e89-8f23-4b1d-bdeb-e7748906a1bb
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடி. - படம்: ஐஸ்டாக்

பிரசல்ஸ்: விமானச் சேவை மூன்று மணிநேரத்துக்கு மேல் தாமதமடைந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற நடைமுறையைத் தொடர ஐரோப்பிய ஒன்றிய (இயு) நாடுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) ஒப்புக்கொண்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அரசதந்திரி ஒருவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் பெட்டிகளுக்கான கட்டணம் குறித்த விவரங்கள் மேலும் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான, விமானப் பயணிகளுக்கு இருக்கும் உரிமைகளின் அடுத்த கட்டத்தை வரைவது தொடர்பில் இந்நடைமுறைகள் குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் இனி தங்கள் பரிந்துரையை வரும் திங்கட்கிழமை (ஜூன் 15) சமர்ப்பிக்கும் என்று தகவல் தெரிவித்த அரசதந்திரி குறிப்பிட்டார்.

10 ஆண்டுகளுக்கும் அதிக காலத்துக்கு முன்பு ஐரோப்பியக் குழுமம் உள்ளிட்டவை பரிந்துரைத்த நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை. குறைந்தது நான்கு மணிநேரம் சேவைத் தாமதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 500 பவுண்டாக நிர்ணயிக்கலாம் என்றும் ஐரோப்பியக் குழுமம் அப்போது பரிந்துரைத்திருந்தது.

குறிப்புச் சொற்கள்