சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின்சாரக் கார்களை பாதியாகக் குறைக்க ஐரோப்பா உடன்பாடு

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின்சாரக் கார்களை பாதியாகக் குறைக்க ஐரோப்பா உடன்பாடு

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

10 Oct 2026 - 5:04 pm

2 mins read

பெய்ஜிங்: சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் இறக்குமதி செய்யப்படும் மின்சாரக் கார்களின் எண்ணிக்கையை குறைக்க சீனா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து ஏராளமான கார்கள் ஐரோப்பாவிற்குள் இறக்குமதியாகின்றன. இதனால் சீனாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பெரும் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்கும் நோக்கத்தோடு பெய்ஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு காணப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் ‘ஹைப்ரிட்’ கார்களின் அளவை பாதியளவுக்கு மேல் குறைக்கக்கூடிய ஓர் ஒப்பந்தத்தை சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் எட்டியுள்ளதாக ஐரோப்பிய வர்த்தக ஆணையர் மரோஸ் செஃப்கோவிக் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இரு தரப்புக்கும் இடையிலான இந்தப் பரஸ்பர புரிதல் சீனாவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரக் கார்களையும் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களின் அளவையும் சீராகக் கட்டுப்படுத்தும்.

மேலும் நான்கு ஆண்டுகளில் பல மில்லியன் கார்களின் இறக்குமதியைக் குறைக்கும் என்றும் இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செஃப்கோவிக் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

அமெரிக்காவின் வரி விதிப்பு, சீனாவின் சீரான ஏற்றுமதி வளர்ச்சி காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகச் சரிவைக் கண்டு வந்த ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர்களின் பங்குகள், இந்தச் செய்தியைத் தொடர்ந்து பரவலாக உயர்வைக் கண்டன.

செஃப்கோவிக், சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்தாவ் உட்பட அதிகாரிகளுக்கு இடையே மூன்று மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

கார்கள் போன்ற சீனப் பொருள்களின் அபரிமிதமான ஏற்றுமதி தொடர்பாக பெய்ஜிங்கிற்கும் பிரஸ்ஸல்சிற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

சீனாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகப் பற்றாக்குறை தினமும் 1 பில்லியன் யூரோவிற்கும் (S$1.6 பில்லியன்) அதிகமாகப் பெருகி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம், வர்த்தக சமநிலையைச் சீரமைப்பதற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த வியாழக்கிழமை பிரஸ்ஸல்சில் தொடங்கும் உச்சநிலை மாநாட்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் இதன் முடிவுகள் குறித்து விவாதிக்கவிருக்கின்றனர்.

இரு தரப்பும் மிகச் சிறந்த முடிவை எட்டியுள்ளதாக செஃப்கோவிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“அதே வேளையில், இது முடிவல்ல. வர்த்தகத்தைச் சீரமைக்கும் இந்தச் செயல்பாட்டில் இது ஒரு முக்கியமான முதல் படி,” என்று பெய்ஜிங்கில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஐரோப்பாசீனாமின்சார கார்ஏற்றுமதி