பெய்ஜிங்: நிதிப் பிரச்சினைகளில் மூழ்கிய எவர்கிராண்ட சொத்து நிறுவனத்தை நிறுவிய ஸு ஜியாயினுக்கு சீனா ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
மேலும், அவரின் தனிப்பட்ட சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஹுய் கா யான் என்று கென்டனிஸ் மொழியில் அழைக்கப்படும் அவர் கடந்த ஏப்ரல் மாதம் தன்மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். சொத்துகளைக் களவாடியது, வர்த்தகரீதியாக லஞ்சம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தன.
எவர்கிராண்ட, சீனாவின் வீடமைப்புச் சந்தை கவிழ்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த நிறுவனமாகும்.
முன்னாள் நிறுவனங்களுக்கு அபராதம்
ஷென்சன் நடுநிலை மக்கள் நீதிமன்றம் (Shenzhen Intermediate People’s Court) ஹுயின் முன்னாள் நிறுவனங்களுக்கு 15.82 பில்லியன் யுவான் (2.99 பில்லியன் வெள்ளி) அபராதமும் விதித்தது. கடன் விவரங்களை மறைத்தது, போலிப் பதிவுகளை உருவாக்கியது போன்ற குற்றங்களுக்காக அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் இத்தகவல்களை வெளியிட்டது.
எவர்கிராண்ட முடங்கிப்போனதில் ஏற்பட்ட விவகாரத்தில் ஹுய்க்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒரு முக்கிய நிகழ்வாக விளங்குகிறது. எவர்கிராண்ட கவிழ்ந்ததால் சீனாவின் சொத்துச் சந்தை ஆட்டம் கண்டது, முதலீட்டாளர்களுடன் உள்ளூர் வங்கிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
ஹுயும் அவரின் வர்த்தகங்களும் சீன சொத்துச் சந்தைக்குப் பெரும் இடையூறு விளைவித்ததாகவும் அதன் காரணமாகக் குறிப்பிடத்தக்க அளவில் பொருளியலுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.
இதர நிர்வாகக் குழுவினருக்கும் தண்டனை
ஹுயின் இரு மகன்கள் உட்பட மற்ற எவர்கிராண்ட நிர்வாகக் குழுவினருக்கும் 22 மாதங்களிலிருந்து 18 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹுய், ஒரு காலத்தில் ஆசியாவின் ஆகப் பெரிய செல்வந்தராக விளங்கினார். எவர்கிராண்ட நிறுவனம் முடங்கிப் போகத் தொடங்கியதிலிருந்து அவரின் செல்வமும் ஆதிக்கமும் பெரிய அளவில் குறையத் தொடங்கின.
அதிகமாகக் கடன் பெற்று அவர் எவர்கிராண்ட நிறுவனத்தை வேகமாக வளர வைத்தார்.
பிறகு சீனாவின் சொத்துச் சந்தையைப் பாதுகாக்க 2020ஆம் ஆண்டு பெய்ஜிங் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனைத் தொடர்ந்து நிதிப் பிரச்சினைகளை எதிர்கொண்ட எவர்கிராண்ட 2021ல் முடங்கிப்போனது.


