ஹெல்சின்கி: சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் இளையர்களின் நல்வாழ்வு பாதிப்படைவதாக ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள சிறுமிகளிடையே பாதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலக மகிழ்ச்சி அறிக்கை (World Happiness Report) இந்தத் தரவுகளை வியாழக்கிழமை (மார்ச் 19) வெளியிட்டது.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக மகிழ்ச்சி அறிக்கையில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்களை அமெரிக்காவின் கேலப் (Gallup) ஆய்வு நிறுவனம் திரட்டியது. இந்தத் தரவுகள் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு மகிழ்ச்சியைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“சமூக ஊடகங்களில் உண்மையான சமூக உறவுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதே இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. சமூக ஊடகங்கள் மக்களைச் சமூக ரீதியாக இணைக்க வேண்டும். ஆனால் இப்போது ‘அல்காரிதம்’ தரவு மூலம் தேவையில்லாத தகவல்கள் திணிக்கப்படுகின்றன. இதனால் பயனர்கள் சமூக ஊடகத்திற்கு அடிமையாகுகின்றனர்,” என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்..
கடந்த டிசம்பர் மாதம், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா தடைவிதித்தது. அதையடுத்து பல உலக நாடுகள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களில் களமிறங்கியுள்ளன.

