சிங்கப்பூருக்கு போதைப் பொருள் கடத்திய பன்னீர் செல்வம் பரந்தாமன் எனும் 38 வயது ஆடவருக்கு, வியாழக்கிழமை (பிப்ரவரி 20) மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அவரது முன்னாள் வழக்கறிஞர் எம் ரவி கூறியுள்ளார்.
‘ஆஸ்ட்ரோஉலகம்.காம்’ இணையத்தளம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
திரு ரவி இதுகுறித்து ஃபேஸ்புக்கில் திங்கட்கிழமை பதிவிட்டுள்ளதாக அது கூறியது. மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்து பன்னீரின் சகோதரிக்கு சிறைத்துறை கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரிகள், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் ஆகிய தரப்புகள் முன்னர், சட்ட ரீதியான ரகசியத் தகவல்களின் ரகசியத்தன்மையைக் காப்பாற்றத் தவறிய சம்பவங்கள் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம், சிறைக்கைதிகள் 13 பேருக்கும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் சட்டவிரோதமாக அரசாங்கத் தரப்பிடம் வெளியிடப்பட்டதாகத் தீர்ப்பளித்தது.
அத்தகைய விதிமீறல்கள் மரண தண்டனை நிறைவேற்றும் நடைமுறையைக் கீழறுப்பதாகவும் அனைத்துலகச் சட்டத் தரநிலைகளுக்கு எதிராக அமைவதாகவும் ரவி கூறினார்.
பன்னீர் 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் 51.84 கிராம் ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டது. 2017ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சாங்கி சிறைச்சாலையில் தண்டனையை நிறைவேற்றும் காலகட்டத்தில் அவர் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். மரண தண்டனைக்கு எதிரான பிரசாரங்களுக்கும் அவர் பங்களித்துள்ளார்.