பருவநிலைப் பேச்சால் ஆசியானில் ஏற்படும் தாக்கம் குறித்து நிபுணர்கள் விளக்கம்

2 mins read
6ac26bfc-fb84-4c94-93d8-faca6fa4e9a9
நவம்பர் 10 பருவநிலை மாநாடு தொடங்குவதற்கு முன்பாக பிரேசிலின் பெலம் நகரில் ஒன்றுகூடி விவாதித்த தலைவர்கள். - படம்: ஏஎஃப்பி

பருவநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் தென்கிழக்கு ஆசியாவில் மக்கள், வேலைகள் மற்றும் இயற்கை வளங்களில் ஏற்படுத்த இருக்கும் தாக்கங்கள் குறித்து சிங்கப்பூரில் உள்ள நான்கு நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.

பருவநிலை தொடர்பான ‘COP30’ இருவார உச்சநிலைக் கூட்டம் திங்கட்கிழமை (நவம்பர் 10) பிரேசிலில் தொடங்குகிறது.

அதனையொட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள், நிபுணர்களிடம் கருத்துகளைத் திரட்டி வெளியிட்டு உள்ளது.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புறப் பருவநிலைப் பிரிவின் பேராசிரியர் வின்ஸ்டன் சோவ் கூறுகையில், பருவநிலை மாற்ற பாதிப்புகளுக்கு தென்கிழக்காசிய வட்டாரம் அதிக இலக்காகக்கூடியது என்றார்.

வானிலையும் கடல்நீர் மட்டமும் உயர்வது உள்ளிட்ட பருவநிலை தொடர்பான பல்வேறு ஆபத்துகளை அந்த வட்டாரம் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்தின் அபாயங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து திருவாட்டி மெலிசா லோ என்னும் நிபுணர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்காசிய வட்டாரம் வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறைகளை அதிகம் உள்ளடக்கி உள்ளதால், ஆபத்துகளைக் குறைக்காவிடில் கரிம வாயு வெளியேற்றம் அதிகரித்துவிடும் என்கிறார் அவர்.

அனைத்துலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் ஆய்வறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி உள்ளார் அவர். 2019ஆம் ஆண்டின் நிலவரப்படி ஐரோப்பிய ஒன்றியத்தைக் காட்டிலும் 25 விழுக்காடு அதிகமாக ஆசியான் நாடுகளின் கரிம வெளியேற்றம் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நிதித் துறையை பருவநிலை மாற்றம் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து திரு சான் வாய்-ஷின் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கரிமக் குறைப்பை தீவிரப்படுத்த ஆசியான் நாடுகளையும் உலக முதலீட்டாளர்களை இணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

வெப்பநிலையைக் குறைக்கவும் குறைவான கரிமத் தெரிவுகளுக்கு மாறவும் தென்கிழக்கு ஆசியப் பொருளியலுக்கு பருவநிலை நிதி அவசியம் என்பது அவரது கருத்து.

புதைபடிவ எரிபொருள் என்பதிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு தென்கிழக்காசிய வட்டாரம் மாறுவதற்கான முயற்சிகளுக்கும் நிதி தேவைப்படும் என்றார் திரு சான்.

அடுத்து, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க சக்திவாய்ந்த செயல்களுக்கு இட்டுச் செல்லும் இயற்கை சார்ந்த தீர்வுகளை திருவாட்டி தமாரா சிங் பரிந்துரைக்கிறார்.

“அத்தகைய தீர்வுகள் இயற்கை சுற்றுச்சூழல் நிலவரத்தை மேம்படுத்தி ஆபத்துகளைக் குறைக்கக்கூடியவை. அத்துடன், சுற்றுச்சூழல், பொருளியல் மற்றும் சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய தீர்வுகள் அவை,” என்கிறார் திருவாட்டி சிங்.

இயற்கைவளப் பாதுகாப்பு அமைப்புக்கான சிங்கப்பூர் குழுவின் நிர்வாக இயக்குநர் அவர்.

குறிப்புச் சொற்கள்