மின்னிலக்க நாணயத் திருட்டில் வடகொரிய ஊடுருவிகளுக்குத் தொடர்புண்டு: வல்லுநர்கள்

மின்னிலக்க நாணயத் திருட்டில் வடகொரிய ஊடுருவிகளுக்குத் தொடர்புண்டு: வல்லுநர்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

31 Oct 2026 - 12:03 pm

2 mins read

நியூயார்க்: பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 6.3 பில்லியன் அமெரிக்க டாலர் (S$8 பில்லியன்) மதிப்புள்ள மின்னிலக்க நாணயங்களைத் திருடியதன் பின்னணியில் வடகொரியக் கணினி ஊடுருவிகள் இருக்கக்கூடும் என்று இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) தெரிவித்துள்ளனர்.

அந்தப் பணம் வடகொரியாவின் ஆயுதத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறினர்.

மின்னிலக்கத் தரவு ஆவணப் புலனாய்வு நிறுவனங்களான டிஆர்எம் லேப்ஸ், செய்னாலிசிஸ் ஆகியவை இத்திருட்டிற்கு ‘டிரேடர்ட்ரெயிட்டர்’ எனும் வடகொரியக் குழுவே காரணம் எனக் கூறியுள்ளன.

அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை, மின்னிலக்க, உள்கட்டமைப்புப் பாதுகாப்பு அமைப்பு, அமெரிக்க நிதி அமைச்சு ஆகியவை 2022ஆம் ஆண்டில் விடுத்த கூட்டு எச்சரிக்கையில் இந்த ஊடுருவல் குழுவின் பெயர் இடம்பெற்றிருந்தது.

மின்னிலக்க நாணய நிறுவனங்களில் உள்ள மென்பொருள் வல்லுநர்களையும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களையும் குறிவைக்க ஊடுருவிகள் எவ்வாறு தீங்கிழைக்கும் மென்பொருள்களையும் மற்றத் தந்திரங்களையும் பயன்படுத்தினர் என்பதை அந்த எச்சரிக்கை விவரித்திருந்தது.

சென்ற ஆண்டு இறுதிவரை வடகொரியா குறைந்தது 6.75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்னிலக்க நாணயத்தைத் திருடியுள்ளதாக செயினாலிசிஸ் நிறுவனம் 2025ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. மொத்தத் தொகையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ‘பைபிட்’ பரிவர்த்தனைத் தளத்தில் நடந்த 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஊடுருவலும் அடங்கும்.

இக்குழு செப்டம்பரில் பிட்கெட் என்ற மற்றொரு பரிவர்த்தனைத் தளத்தைத் தாக்கி 387 மில்லியன் அமெரிக்க டாலரைக் கவர்ந்ததாக டிடெக்ஸ் இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளர் மைக்கல் பார்ன்ஹார்ட் தெரிவித்தார்.

இதனால் வடகொரியா களவாடியுள்ள மின்னிலக்க நாணயத்தின் மதிப்பு ஏறத்தாழ 13.5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்று அவர் சொன்னார்.

திருடப்பட்ட மின்னிலக்க நாணயங்களில் சிலவற்றை முடக்குவதற்குத் தானும் மற்றவர்களும் செயல்பட்டு வருவதாகவும் இதுவரை கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பைனான்ஸ் கூறியுள்ளது.

வடகொரிய அரசாங்கத்திற்குப் பணம் அனுப்பவும் முக்கியத் தரவுகளைத் திருடவும் வடகொரியர்கள் அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் உள்ள தொழில்நுட்ப, நிதி நிறுவனங்களில் ரகசியமாக வேலைக்குச் சேருவதாக மத்திய புலனாய்வுத் துறை அக்டோபர் 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

வடகொரியாவின் இணையக் குற்றங்கள் உலகளாவிய பிரச்சினை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

அனைத்துலகத் தடைகளைத் தவிர்க்கவும் சட்டவிரோதப் பேரழிவு ஆயுதங்கள், புவியீர்ப்பு ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதியளிக்கவும் அந்நாடு, இணையக் குற்றங்களை நோக்கி அதிக அளவில் திரும்பியிருப்பதாக அவர் சொன்னார்.

மின்னிலக்க நாணயத் திருட்டுகளும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்களும் இந்த உத்தியின் முக்கியப் பகுதியாக மாறியுள்ளன என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்