ஈரானியத் துறைமுகத்தில் வெடிப்பு; 25 பேர் மரணம், 1,000 பேர் காயம்

1 mins read
530afedb-8850-4065-97aa-41fc1413ce09
வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து கரும்புகை கிளம்பியது. - படம்: ஏஎஃப்பி

தெஹ்ரான்: ஈரானின் முக்கியத் துறைமுகத்தில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 25 பேர் மாண்டனர். இச்சம்பவத்தில் 1,000 பேர் காயமடைந்ததாக ஈரானிய அதிகாரிகள் கூறினர்.

ஈரானின் ஆகப் பெரிய வர்த்தகத் துறைமுகமான ஷாஹிட் ரஜாயியில் வெடிப்பு ஏற்பட்டது.

இத்துறைமுகம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பண்டார் அப்பாஸ் நகரில் உள்ளது.

வெடிப்பு சனிக்கிழமை (ஏப்ரல் 27) காலை நிகழ்ந்தது.

வெடிப்பு காரணமாக அருகில் இருந்த கட்டடங்களின் சன்னல் கண்ணாடிகள் சிதறின. கூரைகள் இடிந்து விழுந்து நொறுங்கின.

கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் உணரப்பட்டதாகக் குடியிருப்பாளர்கள் கூறினர்.

ஆறு பேரைக் காணவில்லை என்று ஈரானிய ஊடகம் தெரிவித்தது.

வெடிப்புக்குப் பிறகு தீ கொழுந்துவிட்டு எரிவதையும் பலர் தலைதெறிக்க ஓடுவதையும் காணொளிகள் காட்டின. காயமடைந்த சிலர் சாலைகளில் படுத்துக் கிடந்தனர்.

அவ்விடத்தைப் புகை சூழ்ந்திருந்தது. இடிபாடுகள் சிதறிக் கிடந்தன.

எரிபொருள் அடங்கிய கொள்கலன் ஒழுங்காகக் கையாளப்படாததால் வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் ஏவுகணைகளுக்கு அந்த எரிபொருளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மாண்டோரின் குடும்படுத்தினருக்கு ஈரானிய அதிபர் மசூது பெஸெஷ்கியான் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்