கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தில் வெடிப்பு: ஒருவர் மரணம், 9 பேர் காயம்

2 mins read
93f202c7-d170-4c99-bcac-48936b630584
காயமடைந்தவர்களில் நால்வர் மாணவர்கள். சம்பவ இடத்தில் விசாரணை நடைபெறுகிறது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்; குறைந்தபட்சம் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் நான்கு பேர் மாணவர்கள்.

சம்பவம் குறித்து திங்கட்கிழமை (ஜனவரி 12) முற்பகல் 11.40 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் கூறினார்.

பல்கலைக்கழகக் கட்டடத்தின் நான்காவது மாடியில் உணவு, பானக் கடை அருகே உள்ள பராமரிப்பு வட்டாரத்தில் வைக்கப்பட்டிருந்த குளிரூட்டியின் பாகம் வெடித்ததாக அவர் தெரிவித்தார்.

குளிரூட்டியின் ‘கம்ப்ரசர்’ கருவி வெடித்ததன் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

“பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சுவர்களைச் சேதப்படுத்தும் அளவுக்கு வெடிப்பு கடுமையாக இருந்தது. அதன் காரணமாக பறந்து சென்ற இடிபாடுகள் தாக்கியும் தீயில் சிக்கியும் அந்த ஒன்பது பேரும் காயமடைந்தனர்,” என்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது திரு ஃபாடில் கூறினார்.

குளிரூட்டியைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த வெளிப்புறக் குத்தகை நிறுவன ஊழியர்கள் இருவரும் கடுமையாகக் காயமடைந்தனர். அவர்களில் 24 வயது ஆடவர் சிகிச்சை பலனின்றி கோலாலம்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

லேசான, கடுமையான காயங்கள் அடைந்த ஒன்பது பேரும் மலாயா மருத்துவ மையப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர் மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை ஆகியவற்றுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விடுமுறை இன்னும் நீடிப்பதால், வெடிப்புச் சம்பவத்தின்போது குறைவானவர்களே இருந்ததாக திரு ஃபாடில் தெரிவித்தார்.

“சம்பவம் நிகழ்ந்த பகுதி தற்போது முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதி செய்துள்ளது. வெடிப்பு நிகழ்ந்தது எவ்வாறு என்பது குறித்த விசாரணை நீடிக்கிறது,” என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்