இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அனைத்துலக விமான நிலையத்துக்கு அருகில் அக்டோபர் 7ஆம் தேதியன்று வெடிப்பு ஏற்பட்டது.
இதில் சீனாவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகம் தெரிவித்தது. சம்பவத்தை ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக சீனத் தூதரகம் வகைப்படுத்தியது.
குறைந்தது 10 பேர் காயமுற்றதாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்திருந்தது.
“சீனத் தூதரகமும் பாகிஸ்தானில் உள்ள துணைத் தூதரகங்களும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றனர். பாதிக்கப்பட்ட இருநாடுகளையும் சேர்ந்த அப்பாவி மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தோருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
சீனாவைச் சேர்ந்த ஒருவர் காயமுற்றதாகவும் விசாரணை தொடர்வதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் தெரிவித்தார். வெடிப்பு ஏற்பட்ட இடத்துக்கு அருகில் வெளிநாட்டினர் சிலர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வெடிப்புக்குப் பொறுப்பேற்று பலூச் விடுதலை ராணுவம் செய்தியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது.
பொறியாளர்கள் உட்பட சீன நாட்டவர்களைக் குறிவைத்து வெடிகுண்டுகள் அடங்கிய வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி இத்தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

