மணிலா: பிலிப்பீன்சின் நீதி அமைச்சுக் கட்டட நுழைவாயில் அருகே நாட்டு வெடிகுண்டு ஒன்று திங்கட்கிழமை (ஜூலை 27) வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் செனட் கட்டடத்திற்கு அருகே வெடிக்காத நிலையில் கருவியொன்று கண்டெடுக்கப்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு அது வெடித்தது.
நள்ளிரவுக்குச் சிறிது நேரத்திற்குப் பிறகு ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ், மக்களுக்கு நாட்டின் நிலை குறித்த வருடாந்தர உரையை ஆற்றுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்பட்டது.
இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பிருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று தேசிய காவல்துறைத் தலைவர் ஹோசே மெலென்சியோ நர்டாடேஸ் ஜூனியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“வெடிகுண்டு மிரட்டல்கள், உண்மையான குண்டுவெடிப்புகள், மற்ற நிகழ்வுகள் முதலியவற்றைக் கையாளக் காவல்துறையிடம் மாற்றுத் திட்டங்கள் இருந்தன. ஆயினும், எங்கள் கவனத்தை மீறி ஏதோ ஒன்று நீதித்துறைக்கு முன்பாக வெடித்துவிட்டது,” என்று அவர் கூறினார்.
அதிகாலையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் எந்த அளவிற்குப் பெரியது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
“நாங்கள் இன்னும் விசாரணை நடத்திவருகிறோம், எனவே வெடிப்பு எவ்வளவு பெரியது அல்லது சிறியது என்பது குறித்த விவரங்களை எங்களால் வழங்க முடியாது,” என்று மணிலா காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.

