துபாய்: துபாய் விமான நிலையத்திற்கு அருகே வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அதையடுத்து வானத்தில் புகை காணப்பட்டதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அதை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.
வளைகுடா நாடுகளுக்கு அப்பால் ஈரானின் தாக்குதல் தொடரும் நிலையில், சனிக்கிழமை (மார்ச் 7) துபாய் விமான நிலையத்தில் வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது.
இந்நிலையில், விமானங்களின் பயணத்தைக் கண்காணிக்கும் ஃபிளைட்ராடார் 24 (Flightradar24) இணையத்தளம் விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்காமல் வானில் வட்டமிடுவதைக் காட்டியது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்மீது ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் தொடரும் நிலையில் உலகின் ஆகப் பரபரப்பான துபாய் விமான நிலையம் மார்ச் 2ஆம் தேதி ஒரு சில விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியது.
இதற்கிடையே, துபாய் ஊடக அலுவலகம் வானில் பறந்த ஏவுகணை இடைமறிக்கப்பட்டபோது நேர்ந்த சிறு சம்பவத்தால் வெடிப்புச் சத்தம் கேட்டதாகச் சொன்னது. அத்துடன் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்காமல் விமானங்கள் வானில் வட்டமிடுவதாகக் கூறப்படுவதை நிராகரித்தது.
வெடிப்புடன் தொடர்புடைய சம்பவம் விரைவில் கட்டுப்படுத்தப்பட்டதாக துபாய் விமான நிலையம் குறிப்பிட்டது.

