தைவானின் புகழ்பெற்ற கடைத்தொகுதியில் வெடிப்பு; நால்வர் மரணம்

2 mins read
எரிவாயுக் கசிவால் நேர்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது
cd69cb2e-ee0f-4973-ae7a-fa7ef49869d6
ஷின் காங் மிட்சுகோஷி கடைத்தொகுதியின் 12வது மாடியில் வெடிப்பு நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: லி சோங்யு/ஃபேஸ்புக்

தைவான்: தைவானின் தைசுங் நகரில் உள்ள புகழ்பெற்ற கடைத்தொகுதியில் ஏற்பட்ட வெடிப்பில் நால்வர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷின் காங் மிட்சுகோஷி கடைத்தொகுதியின் 12வது மாடியில் பிப்ரவரி 13ஆம் தேதி முற்பகல் 11.30 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டதாகத் தைவானிய ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னதாக ஐவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரண்டு வயதுச் சிறுமி மீட்கப்பட்டதால் அந்த எண்ணிக்கை திருத்தப்பட்டது. மருத்துவமனைக்கு வெளியே இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டதாக அச்சிறுமி முதலில் வகைப்படுத்தப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தில் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இணையத்தில் பரவிய படங்களில், கட்டட முகப்பில் இருந்த கண்ணாடிச் சுவர் போன்ற முழு உயரச் சன்னல்கள் நொறுங்கிக் கிடப்பதைக் காண முடிகிறது.

கடைத்தொகுதியின் உணவங்காடியில் எரிவாயுக் கலன் மாற்றப்பட்டபோது எரிவாயு கசிந்திருக்கலாம் என்றும் அதனால் வெடிப்பு நேர்ந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக ‘லிபர்டி டைம்ஸ்’ நாளேடு கூறியது.

சீரமைப்புப் பணிகளுக்காக அந்த உணவங்காடி மூடப்பட்டிருந்ததாக தைசுங் நகர மேயர் லு ஷியோவ் யென் சம்பவ இடத்தில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.

கடைத்தொகுதியின் மின்தூக்கிகளில் மக்கள் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முற்பகல் 11.33 மணிக்கு வெடிப்புச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாகத் தைசுங் தீயணைப்புத் துறை கூறியது. தீயணைப்புத் துறையினரும் மருத்துவ உதவி வாகனங்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக அது சொன்னது.

பாதிக்கப்பட்டோரில் மக்காவைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குடும்பத்தினரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது. அந்தக் குடும்பத்தின் முதியவர்கள் இருவர் மாண்டுவிட்டனர். இரண்டு வயதுச் சிறுமிக்கு அவசர சிகிச்சை, பராமரிப்பு வழங்கப்படுவதாக சென் சிங் மருத்துவமனை கூறியது.

அந்தக் குடும்பத்தினர் கடைத்தொகுதியை விட்டு வெளியேறியபோது கட்டட இடிபாடுகள் அவர்கள் மேல் விழுந்ததாகத் தெரிகிறது. எரிவாயு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தைசுங் நகர நிர்வாகம் அவசரநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

காயமடைந்தோருக்கு ஆகச் சிறந்த பராமரிப்பை வழங்குவதன் தொடர்பில் சுகாதார அமைச்சு மருத்துவத் துறையினருடன் இணைந்து பணியாற்றுவதாகத் தைவானிய அதிபர் லாய் சிங் டே கூறியுள்ளார்.

வெடிப்புக்கான காரணத்தை அறிய விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்