அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரான் ஆதரவு குழு அறிவிப்பு

அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரான் ஆதரவு குழு அறிவிப்பு

1 mins read
94d29664-2a26-4c38-95d6-b8e7cce11b5f
பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத் தலைமையகம். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பாக்தாத்: ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான தனது தாக்குதல் நிறுத்தத்தை மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிப்பதாக ஈரான் ஆதரவு பெற்ற ஈராக்கிய ஆயுதக் குழுவான கதாயிப் ஹிஸ்புல்லா திங்கட்கிழமை (மார்ச் 23) அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து, ஈராக்கிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஆதரவுக் குழுக்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகளும் அந்த ஆயுதக் குழுக்களின் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தன.

இந்நிலையில், சில முக்கிய நிபந்தனைகளுடன் அமெரிக்கத் தூதரகத்தின் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்துவதாக, அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட கதாயிப் ஹிஸ்புல்லா, மார்ச் 19ஆம் தேதி அறிவித்தது.

ஈராக்கில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் லெபனானின் பெய்ரூட் நகரின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் மீதான தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் அடங்கும்.

அந்தப் பகுதி இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டுள்ள, ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தளமாகும்.

இதற்கிடையே, “அமெரிக்கத் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்கப்படும்,” என்று அக்குழு மார்ச் 23ஆம் தேதி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காதூதரகம்தாக்குதல்