புதுடெல்லி: வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின்படி (எஸ்ஐஆர்) டெல்லி வட்டாரத்தில் பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளையும் ஆட்சேபனைகளையும் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 29) நீட்டித்துள்ளது.
அதன்படி நவம்பர் 25ஆம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 22ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கோரிக்கைகளும் ஆட்சேபனைகளும் பரிசீலனை செய்யப்பட்டு டிசம்பர் 15ஆம் தேதியன்று அகற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
டெல்லி வட்டாரத்தோடு எஸ்ஐஆர் நடவடிக்கைகளின் காலக்கெடு மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, நாகாலாந்து ஆகிய மேலும் ஐந்து மாநிலங்களிலும் நீட்டிக்கப்பட்டது என்பதையும் ஆணையம் தெரிவித்தது.
வாக்காளர்கள் கோரிக்கைகளையும் ஆட்சேபனைகளையும் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கும்படி உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை புதன்கிழமை கேட்டுக்கொண்டதற்குப் பிறகு இந்தச் செயல்பாடு இடம்பெற்றது.
இதற்கு முன்னதாக பொதுமக்கள் கோரிக்கைகளையும் ஆட்சேபனைகளையும் பதிவு செய்யும் காலக்கெடு அக்டோபர் 30ஆம் தேதியன்றும் அவை பரிசீலிக்கப்பட்டு அகற்றப்படும் தேதி நவம்பர் 30 எனவும் இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே டெல்லியில் ஆகஸ்ட் 31ல் வெளியிடப்பட்ட வாக்காளர் முன்வரைவுப் பட்டியலில் 4.76 மில்லியன் கணக்கான மக்களின் பெயர்கள் ஆணையத்தால் நீக்கப்பட்டிருந்தது.
அதில் 275, 856 பேர் ‘ஃபோர்ம்’ 6 என்ற படிவத்தை அன்றைய தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதிக்குள்ளாகப் பூர்த்திசெய்து மீண்டும் பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்திருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி, ‘ஃபோர்ம்’ 6 என்ற படிவம் வாக்காளர் பட்டியலில் மீண்டும் இடம்பெறுவதற்கும், ‘ஃபோர்ம்’ 7 பெயர்களை நீக்கவும் ‘ஃபோர்ம்’ 8 என்பது திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்வதற்கும் பயன்படுகின்றன.
