தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேரிடர் அபாயத்தை மலேசியர்களுக்கு முன்கூட்டியே வேகமாக தெரிவிக்கும் வசதி

1 mins read
6456ca3e-b221-466f-a3ee-b07644984762
மலேசிய தொலைத்தொடர்பு துணை அமைச்சர் டியோ நீ சிங். - கோப்புப் படம்: ஊடகம்

கூலாய்: நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கைத் தகவல்களை தங்களது கைப்பேசியில் பெறும் வசதியை மலேசியர்கள் விரைவில் பெறக்கூடும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் குறுந்தகவல் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட சிறப்புத் தகவலாக அது அனுப்பப்படும்.

மலேசிய தொலைத்தொடர்பு துணை அமைச்சர் டியோ நீ சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

விரைவான, துல்லியமான முன்னெச்சரிக்கைத் தகவல்களை அளிப்பதற்கு மலேசியாவின் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் பணியாற்றி வருவதாக அவர் கூறியுள்ளார்.

கூலாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் ஞாயிறு (ஆகஸ்ட் 24) காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றினார்.

“தற்போதைய நிலையில், பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சார்ந்து உள்ளோம். அதனையும் ஒரு வரையறைக்குள்தான் பயன்படுத்த முடிகிறது.

“ஏராளமானோருக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்கள் தொலைத்தொடர்பு முறையில், ஏற்கெனவே அனுப்பப்பட்ட தகவல்களின் வரிசையில் காத்திருந்த பின்னரே வெளியாகும். அது தாமதத்தை ஏற்படுத்துகிறது.

“எனவே, தற்போது உருவாக்கப்பட்டு வரும் தகவல் முறை கைப்பேசிகளுக்கு நேரடியாகத் தகவல்களை அனுப்பும் வசதியை ஆணையம் வழங்கும்.

“உதாரணத்திற்கு, தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான முன்னெச்சரிக்கைத் தகவலை அனுப்பினால், ஆணையம் அதனை உடனே பெற்று அந்தப் பகுதி மக்களின் கைப்பேசிகளுக்கு அனுப்பிவிடும்.

“இந்த நேரடித் தகவல் பரிமாற்ற முறை ஏற்கெனவே ஜப்பான் போன்ற பல நாடுகளில் உள்ளன. நாமும் அதனைப் பயன்படுத்தும்போது மலேசியர்களுக்கு அது உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்,” என்றார் திருவாட்டி டியோ.

குறிப்புச் சொற்கள்