சிங்கப்பூர்த் தூதரகத்திற்கு அருகே மரம் விழுந்து ஒருவர் மரணம்

சிங்கப்பூர்த் தூதரகத்திற்கு அருகே மரம் விழுந்து ஒருவர் மரணம்

1 mins read
03e9982a-3452-49a8-8309-39de7b91c3e6
ஜாலான் துன் ரசாக் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட மீட்புப் பணியாளர்கள். - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் ஜாலான் துன் ரசாக் பகுதியில் சனிக்கிழமை  (ஜூலை 18)  மரம் விழுந்த சம்பவத்தில் 43 வயது வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

அத்துடன்,  இரண்டு சிறு பிள்ளை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்திற்கு அருகே இரவு கிட்டத்தட்ட 10.20 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது அங்கு விழுந்த ஒரு மரத்தின் அடியில் இரண்டு வாகனங்கள் சிக்கி நசுங்கின.

இச்சம்பவம் குறித்து இரவு 10:20 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக அந்நாட்டின் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட மரம், மொத்தம் எட்டுப் பேருடன் சென்ற இரண்டு கார்களின்மீது விழுந்ததாக முதற்கட்ட விசாரணையின்போது கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த ஓட்டுநர், ஜூலை 19 அதிகாலை 4 மணிக்குக் கோலாலம்பூர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு காரில் ஐந்து பெரியவர்கள், இரண்டு வயதுக் குழந்தை, இரு மாதக் குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும், அவர்கள் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மறுநாள் நள்ளிரவு 12 மணிக்குள் கீழே விழுந்த மரத்தைத் துண்டுதுண்டாக வெட்டி அகற்றும் பணியைக் கோலாலம்பூர் மாநகராட்சி நிறைவுசெய்தது.

குறிப்புச் சொற்கள்