சரிவில் பிறப்பு விகிதம்; பெண்களின் திருமண வயதைக் குறைக்க சீனா திட்டம்

சரிவில் பிறப்பு விகிதம்; பெண்களின் திருமண வயதைக் குறைக்க சீனா திட்டம்

படம்: ஏஎஃப்பி

08 Mar 2026 - 4:29 pm

1 mins read

பெய்ஜிங்: சீனாவின் பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

இந்நிலையில், இளையர்களைத் திருமணம், பிள்ளை வளர்ப்பை நோக்கி ஊக்குவிக்க, தற்போது நடைபெற்றுவரும் அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டங்களில் பிரதிநிதிகள் பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.

அவற்றில், பெண்களுக்கான குறைந்தபட்சத் திருமண வயதை இருபதிலிருந்து பதினாறாகக் குறைப்பது, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்தரப் பிள்ளைப் பராமரிப்பு மானியத்தை 5,000 யுவானாக (கிட்டத்தட்ட 930 சிங்கப்பூர் வெள்ளி) உயர்த்துவது ஆகியவை அடங்கும்.

இவ்வாண்டு ஜனவரியில் வெளியான அதிகாரபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டில் சீனாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 5.63ஆக இருந்தது.

2023ஆம் ஆண்டுப் பதிவான முந்தைய அளவான 6.39 விகிதத்தைவிட அது ஆகக் குறைவு. அதேநேரம் இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.04 ஆக உயர்ந்ததால், நாட்டின் மொத்த மக்கள் தொகை 3.39 மில்லியன் குறைந்து 1.4 பில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, சீன அரசாங்கம் 2025ஆம் ஆண்டு மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பிள்ளைக்கும் மாதம் 300 யுவான் மானியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்