காஸா: இஸ்ரேல் தாக்குதலால் மிகவும் மோசமாகச் சீரழிந்து போயுள்ள காஸா நகரில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
அங்கு 500,000 பேர் கடுமையான பசியில் வாடுவதாக அவ்வமைப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) தெரிவித்தது.
மத்தியக் கிழக்குப் பகுதி ஒன்றில் பஞ்சம் என அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
அப்பேரிடரை முற்றிலுமாகத் தடுத்திருக்க முடியும் என ஐநா மனிதநேய விவகார, அவசரகால உதவி ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைமைச் செயலாளர் டாம் ஃபிளெட்சர் கூறியுள்ளார்.
அந்தப் பாலஸ்தீனப் பகுதிக்கு உதவிப்பொருள்களைக் கொண்டுசெல்ல விடாமல் இஸ்ரேல் திட்டமிட்டுத் தடுத்து வருவதாகவும் அவர் சாடினார்.
ஆனால், காஸாவில் பஞ்சம் நிலவவில்லை என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரோம் நகரைத் தளமாகக் கொண்ட ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாட்டுக் (ஐபிசி) குழுவின் அறிக்கையை அது கடுமையாகச் சாடியது. மேலும், அது ஹமாசின் பொய்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் குறிப்பிட்டது.
“அண்மை வாரங்களில் காஸாவிற்கு அதிக அளவிலான உணவுப்பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதனால், அங்கு உணவுப்பொருள்களின் விலையும் குறைந்துள்ளது,” என்று அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, பட்டினிபோடுவதைப் போர்முறையாகப் பயன்படுத்துவது போர்க்குற்றம் என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தூதர் வோல்கர் டர்க் கூறியிருக்கிறார்.
பட்டினிச்சாவுகளும் நோக்கத்துடன் கொலைசெய்த போர்க்குற்றத்திற்குச் சமமாகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தண்டனைக்குட்படுத்தாமல் காஸாவில் அந்நிலையைத் தொடர அனுமதிக்கக்கூடாது என்று ஐநா தலைமைச் செயலாளார் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
காஸாவில் உடனடியாகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்துப் பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அப்பகுதிக்கு மனிதநேய உதவிகள் தடையின்றிச் சென்றடைய வழிவகுக்க வேண்டும் என்றும் திரு குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
“22 மாதங்களாக இடைவிடாது நடந்த சண்டையால் காஸாவில் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினி, வறுமை, மரணம் போன்ற பேரிடர்களை எதிர்கொண்டு வருகின்றனர்,” என்று ஐபிசி அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த எண்ணிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குள் 641,000ஆக உயரக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.

