எஃப்பிஐ தரவுத்தளத்தில் ஊடுருவல்; தீவிர விசாரணை

எஃப்பிஐ தரவுத்தளத்தில் ஊடுருவல்; தீவிர விசாரணை

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

21 Nov 2026 - 5:06 pm

1 mins read

வாஷிங்டன்: குற்றவியல் நீதித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள மத்திய, மாநில, உள்ளூர்ச் சட்ட அமலாக்க அமைப்புகள் பயன்படுத்தும் நாடு தழுவிய தரவுத்தளத்தில் ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் தரவுக்கசிவு குறித்து அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக சிஎன்என் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) செய்தி வெளியிட்டது. விசாரணை குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட இருவரை மேற்கோள் காட்டி அத்தகவல் வெளியானது.

தேசியக் குற்றத் தகவல் நிலையத் தரவுத்தளத்தில் ஊடுருவல் நடந்திருப்பது உறுதியானால், அண்மைய மாதங்களில் எஃப்பிஐ அமைப்புக்குள் நிகழும் இரண்டாவது ஊடுருவலாக இது அமையும். அத்துடன், கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகளைக் கலக்கமடையச் செய்த தொடர் இணையச் சம்பவங்களில் இது ஆக அண்மைய ஒன்றாகும். இதுகுறித்து கருத்துக் கேட்க ராய்ட்டர்ஸ் விடுத்த கோரிக்கைக்கு அப்பிரிவு பதிலளிக்கவில்லை.

பிடியாணைகள், குற்றப் பின்னணி, பின்புலச் சோதனைகள் குறித்த தகவல்களைச் சேமித்துப் பகிர நாடு முழுவதும் உள்ள சட்ட அமலாக்க அமைப்புகள் இத்தரவுத்தளத்தைப் பயன்படுத்துகின்றன.

கடந்த வாரம் நிகழ்ந்த முக்கிய இணையத் தடைகளில், மில்லியன்கணக்கான மைக்ரோசாஃப்ட் பயனர்களைப் பாதித்த உலகளாவிய சேவைத் தடையும், 18,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளைப் பாதித்த நாடு தழுவிய விமானப் பயண முடக்கமும் அடங்கும்.

முன்னதாக செப்டம்பரில் ‘ஷைனிஹன்டர்ஸ்’ எனும் மின்னிலக்கரீதியாக மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல், எஃப்பிஐ வேலைவாய்ப்பு இணையத்தளத்திற்குள் ஊடுருவி தற்போதைய, முன்னாள் ஊழியர்களின் தரவுகளைக் கசியவிட்டது.

குறிப்புச் சொற்கள்