நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தில் பல்லாயிரக் கணக்கான தொழில்நுட்பத் திறனாளர்கள் வாழ்கின்றனர்.
அதனால் அந்நகரில் நூற்றுக்கணக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பிலான புதிய நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இதனால், வாடகை, வீட்டு விலைகள், விளம்பரங்கள் ஆகியவை அதிகரித்து பெருவளர்ச்சியை எட்டியுள்ளன.
ஆனால், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் பங்குகளும் முதலீடுகளும் சரிந்தால் என்ன ஆவது? என்ற அச்சம் இப்போது சான் ஃபிரான்சிஸ்கோவில் நிலவுகிறது.
செயற்கை நுண்ணறிவு சரிவைச் சந்திக்கச் சாத்தியம் உள்ளது என அனைத்துலக நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
என்விடியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜென்சன் ஹுவாங் தொடர்பான சர்ச்சையால், சில பங்குகளின் விலை குறைந்ததால் கவலைகள் தொடர்கின்றன. எனினும், என்விடியா தொடர்ந்து அதிக லாபம் ஈட்டுகிறது. அதன் காலாண்டு லாபம் 65 பில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலிவான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் சீனாவிலிருந்து வருவதால், அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பெரும் செலவுகளை ஈடுகட்ட முடியுமா என ஊழியர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார். சந்தை வீழ்ச்சி முற்றிலும் சாத்தியம் என மற்றொருவர் கூறுகிறார்.
ஆனால், செயற்கை நுண்ணறிவால் மனிதகுலத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்தே மிகப்பெரிய கவலை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
வீழ்ச்சி ஏற்பட்டால், சிலிக்கான் வேலியை விட சான் ஃபிரான்சிஸ்கோவே அதிகம் பாதிக்கப்படும். ஏனெனில் அந்தப் பெருவளர்ச்சி அங்கேயே மையம் கொண்டுள்ளது. 2023 முதல் 2025 வரை அமெரிக்காவில் செய்யப்பட்ட முதலீட்டில் 60 விழுக்காடு சான் ஃபிரான்சிஸ்கோ நிறுவனங்களுக்கே சென்றது.
முந்தைய தொழில்நுட்பப் பெருவளர்ச்சிகளைக் காட்டிலும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் குறைவான ஊழியர்களையே வேலைக்கு அமர்த்தியுள்ளன. இதனால் சரிவு ஏற்பட்டாலும், வேலை இழப்புகள் குறைவாகவே இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
