வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வயது மட்டுமல்ல, அவர் அந்நாட்டின் வரலாற்றில் ஆக வயதான அதிபராகச் செயல்படுவதும் ஜனநாயகக் கட்சியினுள் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரு பைடனுக்கு 81 வயதாகிறது.
வலுவான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, சாதனை அளவில் குறைவான வேலையின்மை விகிதம், அதிகரித்துவரும் சம்பளங்கள், குறைந்துவரும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு இடையிலும், அண்மையில் நடத்தப்பட்ட வால் ஸ்திரீட் ஜர்னல் கருத்தாய்வு ஒன்றில், 1,500 வாக்காளர்களில் 23 விழுக்காட்டினர் மட்டுமே திரு பைடனின் கொள்கைகள் தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் உதவி இருப்பதாகக் கூறினர்.
பொருளியல், பணவீக்கம், குற்றச்செயல், எல்லைப் பாதுகாப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் என கிட்டத்தட்ட ஒவ்வொரு விவகாரத்திலும், முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மேலும் நன்றாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக வாக்காளர்கள் தெரிவித்தனர்.
திரு பைடன் கருக்கலைப்பு விவகாரத்திலும், அரசியல் தொனியிலும் மட்டுமே நன்றாகச் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட மற்ற கருத்துக்கணிப்புகளைப் போலவே, அண்மைக் கருத்தாய்விலும் திரு டிரம்ப், 77, திரு பைடனுக்கு முன்னிலையில் உள்ளார்.

