கொழும்பு/இலங்கை: வெளிநாடுகளில் வேலை தேடும் இலங்கை நாட்டவரின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் குறைந்துள்ளது என்று வெளிநாட்டு வேலைகளுக்கான உரிமம் பெற்ற முகவர்கள் சங்கம் (ALFEA) செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்துள்ளது.
முன்னாள் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் செய்த ஊழல், நிர்வாகச் சீர்கேடு ஆகியவை அதற்கான காரணங்கள் என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலத்தில் வெளிநாடுகளில் வேலை தேடியோர் ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் தற்போது பலரை அதுபோன்று வாய்ப்புகளைத் தேடுவதை தவிர்க்க வைத்துள்ளது என்று சங்கத்தின் உறுப்பினர் முஹம்மது அசாம் கூறினார்.
இந்தப் பிரச்சினை அண்மையில் தலைநகர் கொழும்பில் சங்கம் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய கிழக்கு போன்ற வட்டாரங்களுக்கு ஊழியர்கள் அனுப்பப்படுவது வெகுவாக குறைந்துள்ளது எனவும் திரு முஹம்மது குறிப்பிட்டார்.
இருப்பினும் அடுத்த ஆண்டுமுதல் அரசாங்கத்துடன் இணைந்து, வெளிநாட்டில் பணியாற்றுவதற்கான விதிமுறைகளை சீர்படுத்தப்போவதாக சங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஆதரவோடு முறையாக சட்டங்களையும் விதிகளையும் செயல்படுத்தினால், வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை S$13 பில்லியன் (US$10 billion) வரை உயரும் என்று திரு முஹம்மது நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE), இவ்வாண்டில் இதுவரை 300,000க்கும் மேற்பட்ட இலங்கை நாட்டவர் வெளிநாடுகளுக்குப் பணியாற்றச் சென்றுள்ளனர் என்று விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதில் 184,085 ஆண்களும், 116,106 பெண்களும் அடங்குவர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் 194,982 பணியாளர்கள், அவர்களாகவே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதோடு, 105,209 பேர் உரிமம் பெற்ற முகவர்களின் ஏற்பாட்டில் பலநாடுகளுக்கு வேலை செய்ய அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் இலங்கை S$ 9.28 பில்லியன் (US$7.19 பில்லியன்) அயலகப் பணப் பரிவர்த்தனைகளின்வழி பெற்றுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

