ஜகார்த்தா: இந்தோனீசியாவில் வரும் நவம்பர் 27ஆம் தேதி உள்ளூர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் முக்கியமாக ஜகார்த்தாவின் ஆளுநர் பதவிக்கும் தேர்தல் நடக்கிறது.
இந்தோனீசிய அரசியலில் தடம்பதிக்க ஜகார்த்தா ஆளுநர் பதவி முக்கியமான ஒன்று. ஜகார்த்தா ஆளுநராக இருப்பவர்களுக்கு இந்தோனீசிய அதிபராகும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
முன்னாள் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் ஜகார்த்தாவிற்கு ஆளுநராக இருந்துள்ளார்.
தேசிய ஊடகங்கள் ஜகார்த்தா ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்பதால் இந்தோனீசிய மக்களிடையே ஜகார்த்தா ஆளுநரின் பெயர் பிரபலமாக இருக்கும்.
8.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஜகார்த்தாவில் ஆளுநர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
இருப்பினும் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி இருப்பதாக இந்தோனீசியாவின் கோம்பஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
53 வயது ரிட்வான் கமில், முன்னாள் அமைச்சர் பிராமோனோ அனுங் (61) இருவரும் அதிக அளவில் வாக்குகளைப் பெறுவார்கள் என்று கோம்பஸ் நடத்திய கருத்துகணிப்பு கூறுகிறது.
ரிட்வானுக்கு 38.3 விழுக்காடு வாக்குகளும், பிராமோனோவுக்கு 34.6 விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இரு வேட்பாளர்களும் ஜகார்த்தாவுக்குள் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பொருளியல் நிலவரத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும் வெள்ளம், போக்குவரத்து நெரிசல் ஆகிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் பேசிவருவதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மூன்றாவது வேட்பாளராக 58 வயது தர்மா போங்க்ரெக்கூன் உள்ளார். முன்னாள் காவல்துறை தலைவரான அவருக்கு 3.3 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
1,200 பேரிடம் கோம்பஸ் நாளிதழ் கருத்துகணிப்பு நடத்தியது. அதில் 23.8 விழுக்காட்டினர் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தனர்.