தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரண தண்டனையில் இருந்து அதிசயமாகத் தப்பிய பிலிப்பீன்ஸ் பெண் தாயகம் திரும்புகிறார்

1 mins read
bd7e2925-51a8-497d-8036-ec46b2969d3b
மேரி ஜேன் வெலோசா, 39. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: போதைப்பொருள் குற்றத்திற்காக விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து வியப்பளிக்கும் வகையில் தப்பிய பிலிப்பீன்ஸ் பெண்ணை அவரது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

மேரி ஜேன் வெலோசா, 39, எனப்படும் அந்தப் பெண்ணை நாடு கடத்துவதற்கான உடன்பாடு ஒன்றில் மணிலாவும் இந்தோனீசியாவும் இம்மாதத் தொடக்கத்தில் கையெழுத்திட்டன.

இரு குழந்தைகளுக்குத் தாயான மேரி ஜேன், 2.6 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த குற்றத்திற்காக 2010ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அது பிலிப்பீன்சில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அனைத்துலகப் போதைப்பொருள் கும்பல் தம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்தியது என்றும் தம்மிடம் கொடுக்கப்பட்ட கைப்பெட்டிக்குள் போதைப்பொருள் இருந்தது தமக்குத் தெரியாது என்றும் அந்தப் பெண் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆயினும், 2015ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

நாள்கள் நெருங்கிய வேளையில், அந்தப் பெண்ணை போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மரண தண்டனை நிறுத்தப்பட்டு, மேரி ஜேனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை முடிந்ததும் அவரை பிலிப்பீன்சுக்குத் திருப்பி அனுப்ப இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதன் அடிப்படையில் அந்தப் பெண் யோக்யக்கார்த்தா மாநில மகளிர் சிறைச்சாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) ஜகார்த்தா கொண்டு செல்லப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் பிலிப்பீன்ஸ் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார் என்று இந்தோனீசிய அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்