மணிலா: பெண்களைக் குத்தியதாகக் கூறப்படும் 37 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பீன்சின் சிபு நகரில் ஜூன் 9ஆம் தேதி மூன்று பெண்களை மூன்று வெவ்வேறு சம்பவங்களில் சந்தேக நபர் குத்தியதாகக் கூறப்படுகிறது.
தான் அவ்வாறு செய்ததற்கான காரணத்தைக் கேட்டதற்கு, “அழகான பெண்களை எனக்குப் பிடிக்காது. அவர்கள் போலியானவர்கள்,” என்றாராம்.
இதற்கு மேலும் தாக்குதல்கள் நிகழாமல் தடுக்க, சந்தேக நபருக்கு எதிராகக் குற்றச்சாட்டு பதிவுசெய்ய மூன்று பெண்களும் உறுதியாக உள்ளனர் என்று சிபு டெய்லி நியூஸ் நிறுவனம் தெரிவித்தது.
முதல் பெண்ணை மாலை 6.35 மணியளவில் சந்தேக நபர் தாக்கியதாக மணிலா புல்லட்டின் குறிப்பிட்டது.
பெண்ணின் வலது கண்ணைத் தனது முழங்கையால் ஆடவர் இடித்ததாகக் கூறப்படுகிறது.
பின், ஐந்து நிமிடங்கள் கழித்து அதே தெருவில் வேறொரு பெண்ணின் மூக்கை ஆடவர் குத்தியதாக நம்பப்படுகிறது.
மூன்றாவது பெண்ணை இரவு ஏழு மணியளவில் ஆடவர் குத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் தரையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வழிப்போக்கர்கள் இதைப் பார்த்ததும் சந்தேக நபரைப் பிடித்து அடக்கி, காவல் அதிகாரிகள் வந்த பின்பு அவர்களிடம் ஒப்படைத்தனர்.
தனது செயல்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குச் சந்தேக நபர் பதிலளிக்கவில்லை.
ஆனால், சிறையில் மற்ற கைதிகள் கேட்டபோது தனக்கு அழகான பெண்கள் பிடிக்காது என்றும் அவர்களைத் தான் போலி எனக் கருதுவதாகவும் கூறியிருந்தார்.

