தன்னைத் தாக்கிய மலைப்பாம்பை ஆடவர் ஒருவர் கடித்தே கொன்ற சம்பவம் பிலிப்பீன்சில் நிகழ்ந்துள்ளது.
இம்மாதம் 20ஆம் தேதி அதிகாலையில் போகோல் மாநிலத்திலுள்ள ஆன்டிகுவெரா பகுதியில் தனது மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார் போல்ஜுலியோ அலெரியா, 48, என்ற அந்த ஆடவர்.
அப்போது, புதரிலிருந்து வெளிப்பட்ட அந்த மூன்று மீட்டர் நீள மலைப்பாம்பு சாலையை மறித்தவாறு கிடந்தது.
இதுபற்றி உள்ளூர்த் தொலைக்காட்சியிடம் விவரித்த திரு அலெரியா, “சாலையில் மலைப்பாம்பு கிடந்ததால் அது கடக்க ஏதுவாக எனது மோட்டார்சைக்கிளை நிறுத்தினேன். ஆனால், அது என்னைத் தாக்கியது கண்டு நான் வியப்படைந்தேன்.
“அது என் கையைக் கடித்ததால் மோட்டார்சைக்கிளிலிருந்து எனது பிடியை விட்டேன். அது தன் வாலால் என் இடுப்பைச் சுற்றியது. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது.
“அதனை எதிர்த்துப் போராடவில்லை எனில் இறந்துவிடுவேன் என நினைத்தேன். அதனால், அதன் கழுத்தைக் கடித்தால் மட்டுமே என்மீதான அதன் பிடியைத் தளர்த்த முடியும் என்று நினைத்தேன்,” என்று திரு அலெரியா சொன்னதாக ‘தி பிலிப்பீன்ஸ் ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.
தமது இன்னொரு கையால் மலைப்பாம்பின் தலையைப் பற்றிய திரு அலெரியா, தன் பற்களால் அதன் கழுத்தைக் கடித்தார்.
“அதன் தோல் உரியும்வரை கடித்தேன். தோல் உரிந்ததும் அதன் தசையைக் கடித்தேன். அதன் பிறகே மலைப்பாம்பு தன் பிடியைத் தளர்த்தியது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாக, மலைப்பாம்பு சாகும் வரைக்கும் அதன் தசைகளைத் தான் கடித்ததாகவும் அவர் சொன்னார்.
அதன்பின், மருத்துவ உதவிக்காக அருகிலிருந்த வீட்டிற்கு அவர் நடந்துசென்றார். பின்னர் அவர் தக்பிலரான் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
அந்த மலைப்பாம்பை உள்ளூர்வாசிகள் சுட்டுத் தின்றுவிட்டதாகவும் திரு அலெரியா சொன்னார்.