நோம் பென்: பிலிப்பீன்சை சேர்ந்த 13 கர்ப்பிணிப் பெண்களுக்கு கம்போடிய நீதிமன்றம் ஒன்று நான்காண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
வாடகைத் தாயாக இருந்ததற்காக அப்பெண்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டவிரோதமான அச்செயலுக்கு எதிராக கம்போடியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் கம்போடியக் காவல்துறையினர், கண்டால் மாநிலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 24 பெண்களைத் தடுத்து வைத்திருந்தனர். அவர்கள் மீது எல்லை தாண்டிய ஆள்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதென கண்டால் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அந்த 13 பெண்களும் அவர்களில் அடங்குவர்.
நீதிமன்ற விசாரணை முடிந்த பிறகு அந்த 13 பேருக்கும் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவற்றில் ஈராண்டுச் சிறைத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றத் தேவையில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்கள் 13 பேரும், குழந்தை பெற்று பணத்துக்காகப் பிறரிடம் விற்கும் எண்ணத்துடன் இருந்ததற்கு வலுவான ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அச்செயல், ஆள்கடத்தல் நடவடிக்கையாகும் என்றும் நீதிமன்றம் சுட்டியது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 13 பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை என்ன என்பது குறித்து நீதிமன்ற அறிக்கையில் தகவல் வெளியிடப்படவில்லை.

