இரும்புக் கடையில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் டீசல் பறிமுதல்

இரும்புக் கடையில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் டீசல் பறிமுதல்

படம்: பெர்னாமா

13 Nov 2026 - 8:44 pm

2 mins read

டுங்குன்: திரெங்கானுவின் உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சு, நவம்பர் 12ஆம் தேதியன்று கோலா டுங்கூனில் உள்ள ஓர் இரும்புக் கடையில், முறையான அனுமதியின்றிச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் டீசலைப் பறிமுதல் செய்தது.

திரெங்கானு உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சின் இயக்குநர் முகம்மது முஃப்சி லேட் கூறுகையில், இந்த எரிபொருள் அக்கடையின் மேல்தளத்தில் இருந்த ஆறு பாலிகார்பனேட் கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.

மேலும், முதற்கட்ட விசாரணையின்படி, அங்குள்ள இயந்திரங்களின் பயன்பாட்டிற்காகக் கூறப்படும் இந்த டீசல் சேமிப்பு நடவடிக்கை, கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“அருகிலுள்ள பெட்ரோல் நிலையமொன்றிலிருந்து 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட நெகிழிக் கொள்கலன்கள் மூலம் டீசல் பெறப்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் குழாய்கள் வழியாக அந்த இடத்தில் உள்ள மேல்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த சேமிப்புத் தொட்டிகளுக்கு அது மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

“இருப்பினும், இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. டீசலை வழங்கிய பெட்ரோல் நிலையத்தைக் கண்டறிவதுடன், எரிபொருளை வாங்குவதற்கு ‘ஃப்ளீட் அட்டைகள்’ அல்லது ‘மானிய டீசல் கட்டுப்பாட்டுத் திட்டம்’ தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று, அந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட டீசலைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் திரு முகமது முஃப்சி தெரிவித்தார்.

அந்த வளாகம், முறையே 60, 70 வயதுகளில் உள்ள ஓர் ஆண், ஒரு பெண் ஆகிய இரண்டு வணிகக் கூட்டாளிகளுக்குச் சொந்தமானது என்றும் அவர்கள் வழங்கல் கட்டுப்பாட்டாளரிடமிருந்து எழுத்துபூர்வ அனுமதி பெறாமல் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களைச் சேமித்து வைத்துக் குற்றம் செய்ததாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் முகமது முஃப்சி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின்போது, ​​இரண்டு எரிபொருள் ஏற்றிகள், ஆறு பாலிகார்பனேட் தொட்டிகளையும் உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சு பறிமுதல் செய்ததாகவும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 7,605 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த வழக்கு 1961ஆம் ஆண்டின் வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்