கோலாலம்பூர்: அமெரிக்கத் தற்காப்பு அமைச்சுடன் செய்துகொண்டுள்ள கனிமவள விநியோகத் தொடர் ஒப்பந்தத்தில் உள்நாட்டு நிறுவனத்துக்கு உள்ள நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும்படி மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாகாங் மாநிலத்தில் கனிமவள ஆலையை நடத்திவரும் ஆஸ்திரேலியச் சுரங்க நிறுவனமான லைனாஸ், மார்ச் மாதம் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சுடன் நான்கு ஆண்டுகளுக்கு விநியோகம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இருதரப்பையும் பிணைக்கும் அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு S$124 மில்லியன் (மலேசிய ரிங்கிட் 393.2 மில்லியன்) என்று அறியப்படுகிறது.
அந்த ஒப்பந்த்தின்படி, மெல்லிய, எடை அதிகம் உள்ள மண் சார்ந்த வளங்களை அமெரிக்க தற்காப்பு அமைச்சு, லைனாஸ் நிறுவனத்திடம் வாங்கும்.
அது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கும் விநியோகத் தொடர் மீள்தன்மைக்கும் பயன்படும். அத்தைகைய வளங்கள் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான நவீன தற்காப்புக் கட்டமைப்புகளின் உற்பத்திக்குத் தேவையானது எனக் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் மலேசியாவை உலக அளவில் முன்னிலைப்படுத்தியுள்ளளது. மலேசியா தனது வெளியுறவுக் கொள்கைகளைக் கவனமாகவும் சமநிலைத்தன்மையுடனும் வடிவமைத்துள்ளது. குறிப்பாக, பாலஸ்தீன விவகாரத்தில் அதற்கு ஆதரவாகவே மலேசியா நெடுநாள்களாக செயல்பட்டுவருகிறது.
ஆனால், தற்போது மலேசியாவின் கனிம வளங்கள் அமெரிக்க ராணுவ விநியோகத் தொடரின் அங்கமாவது அந்நாட்டு வெளியுறவு நிலைப்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப வழிவகுத்துவிட்டது.
இம்மாத இறுதிக்குள்ளாக அரசாங்கம் தனது நிலையை பொதுவில் விளக்கவேண்டும் என்று நாடாளுமன்ற ஆய்வுக் குழு வெள்ளிக்கிழமை (ஜூலை 17) அழுத்தம் கொடுத்தது.
மலேசிய இறையாண்மைக்கும் நலனுக்கும் அனைத்துலக நற்பெயருக்கும் ஏற்றவகையில் அரசாங்கம் கனிம வளங்களுக்கென தெளிவான வெளிநாட்டு முதலீட்டு வரையறைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அக்குழு கேட்டுக்கொண்டது.

