ஜார்ஜ்டவுன்: செயல்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட வரவாற்றுச் சிறப்புமிக்க ‘புலாவ் பினாங்’ படகு தனது இறுதிப் பயணமாக, பட்டர்வொர்த், சுங்கை டாலாமிலிருந்து இழுத்து வரப்பட்டு, பினாங்கு நீரிணையைக் கடந்து, பினாங்கு தீவில் உள்ள சுவெட்டன்ஹம் படகு முனையத்தில் நிறுத்தி வைக்கப்படும்.
பின்னர் அது மறுசீரமைக்கப்பட்டு, பினாங்கு படகு அரும்பொருளகம் என்று பெயரிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டில் பாகான் டாலாம் நீர்ப் பகுதியில் பாதி மூழ்கியிருந்த இந்தப் படகு, பிரிந்தெரோ மெர்சண்டைஸ் (Printhero Merchandise) நிறுவனத்தால் ஒரு நிலையான அரும்பொருளகமாக மாற்றப்படும்.
இந்த படகு அக்டோபர் 3ஆம் தேதி பிற்பகல் பாகான் டாலாம் நீர்ப் பகுதியிலிருந்து சுவெட்டன்ஹம் படகு முனையத்துக்கு இழுத்துச் செல்லப்படும். அங்கு அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று பிரிந்தெரோ நிறுவனம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.
“பாகான் டாலாம் நீர்ப் பகுதி மூடப்பட்ட பிறகு மலேசிய ரயில்வே தொங்கு பாலத்தைக் கடக்கும் கடைசி படகு இது என்பதால் இந்த வரலாற்றுத் தருணத்தை காண பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் அழைக்கப்படுகின்றனர்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புலாவ் பினாங் என்பது பினாங்கு மாநிலத்தின் பயணிப் படகுகளில் ஒன்றாகும். இது பினாங்கு தீவிற்கும் பட்டர்வொர்த்துக்கும் இடையே பிரதான நிலப்பரப்பில் செல்லும் வழித்தடமாக இருந்தது.
பினாங்கு நீரிணையின் குறுக்கே செல்லும் ஆரஞ்சு நிற இரட்டை முனைப் படகுகள், பயணிகளும் வாகனங்களும் பிரதான நிலப்பரப்பில் உள்ள பட்டர்வொர்த்திற்கு கடக்க இரு வழிகளிலும் ஒரு முக்கியமான போக்குவரத்து முறையாக இருந்தது.
பினாங்கில் உள்ள படகுச் சேவையானது நாட்டிலேயே மிகப் பழமையானது. உள்ளூர் தொழில்முனைவரான குவா பெங் கீ தனது சகோதரர்களுடன் சேர்ந்து பெங் பிரதர்ஸ் என்ற பெயரில் 1894ல் அறிமுகப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
பழைய வரலாற்றுச் சின்னமான படகுகளில் சில 1970களில் செயல்படத் தொடங்கின. அவை 2020ன் இறுதியில் செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக விரைவுப் படகுகள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டன.
வாகனங்களை ஏற்றிச் செல்லும் ஒரு பழைய படகு ஜூலை 2023 வரை மோட்டார் சைக்கிள்கள்களையும் சைக்கிள்களையும் ஏற்றிக்கொண்டு அந்தப் பாதையில் தொடர்ந்து பயணித்தது.
பினாங்கு துறைமுக நிறுவனத்தால் 100 மில்லியன் ரிங்கிட் செலவில் நான்கு புதிய நவீன படகுகள், ஆகஸ்ட் 2023 முதல் இந்த வழித்தடத்தில் இயங்குவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

