ஹனோயில் இரு குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு நிதி உதவி

ஹனோயில் இரு குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு நிதி உதவி

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

01 Nov 2026 - 11:41 am

1 mins read

ஹனோய்: வியட்னாம் தலைநகர் ஹனோயில் 35 வயதுக்கு முன்பாக இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 2027ஆம் ஆண்டுமுதல் ஒருமுறை உதவித்தொகையாக 4 மில்லியன் டாங் ($198) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹனோய் நகர மக்கள் மன்றம் அங்கீகரித்த அக்கொள்கையின்கீழ் பயன்பெறத் தகுதிபெறும் பெண்கள் அப்பகுதியில் குறைந்தது ஆறு மாதங்கள் நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ வசித்திருக்க வேண்டும் என வியட்னாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரசவங்களின் எண்ணிக்கையைக் கருதாமல் ஒரு தாய் பெற்றெடுத்த குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே நிதி உதவி வழங்கப்படும்.

மேலும், பிறப்புப் பதிவுசெய்யப்படும் நேரத்திலன்றி குழந்தை பிறக்கும்போதே பெண்ணின் வயது கணக்கிடப்படும்.

வீட்டுவசதி, பிள்ளைப் பராமரிப்பு, கல்விச் செலவுகளால் அண்மைக்காலமாக வியட்னாமில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் மக்கள்தொகைக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 35 வயதுக்குப்பின் கருவுறுவது உயர் ரத்த அழுத்தம், கர்ப்பக்கால நீரிழிவு போன்ற மருத்துவச் சிக்கல்களை உண்டாக்கும் என்பதால் தாய்மார்களின் உடல்நலனையும் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆண்டுதோறும் 15,000 பெண்கள் பயனடைவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உதவித்தொகையாகனது பிள்ளைகளை வளர்க்கும் குடும்பங்களுக்குக் கல்விச் செலவுகளுக்கான முழுமையான ஈடாக அமையாமல் ஒரு பகுதி நிதி உதவியாக மட்டுமே இருக்கும் என ஹனோய் நகர மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்