கோலாலம்பூர்: ஆகஸ்ட் மாதம் நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 ரிங்கிட் (US$2,460) மலேசியா வழங்கவுள்ளது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்த உதவிக்கு ஒப்புதல் அளித்தார். தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மூலம் இந்த உதவி விநியோகிக்கப்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்திற்குள் நடந்த விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் கூறினார்.
வாரிசுதாரர்களுக்கான ‘நாட்மா’ அமைப்பின் முன்னுரிமை வரிசைப்படி இந்த நிதி வழங்கப்படும் என்றும் இதில் வாழ்க்கைத் துணைக்கு முதல் முன்னுரிமையும் அதனைத் தொடர்ந்து பெற்றோர், பிள்ளைகளுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற தீபாவளி திருவிழாவைப் பார்வையிட்ட பிறகு திரு ரமணன் இந்த உதவி பற்றி அறிவித்தார்.
நிதி அமைச்சிடம் இருந்து கூடுதல் விவரங்களைப் பெற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தொடர்புகொள்ளுமாறு மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவின் (மித்ரா) தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 26 அன்று, பனிப்பாறைகள், பாறைகள் சரிந்ததால், இமயமலைப் பள்ளத்தாக்குகள் வழியாக மண், நீர், இடிபாடுகள் பெருக்கெடுத்து ஓடியதைத் தொடர்ந்து, நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில், இந்துக்கள், பௌத்தர்களுக்குப் புனிதத் தலமான திபெத்தில் உள்ள கைலாச மலைக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளும் யாத்ரிகர்களும் அடங்குவர்.
மலேசியாவைச் சேர்ந்த 55 குடிமக்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று அந்நாடு ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. அவர்களில் ஒருவர் அக்டோபர் 1ஆம் தேதியன்று பாதுகாப்பாக வீடு திரும்பினார். மீதமுள்ள 54 பேரின் நிலை இன்னும் தெரியவில்லை.
காணாமல் போன தங்கள் நாட்டு குடிமக்களைக் கண்டறியும் முயற்சியை மலேசிய அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அந்தப் பேரிடரில் குறைந்தது 1,451 பேர் உயிரிழந்தனர். நேப்பாள அரசாங்கத்தின் தரவுகளின்படி, 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட கிட்டத்தட்ட 5,700 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
