மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட நான்கு வயதுச் சிறுவனை நாற்காலியிலிருந்து தரையில் இழுத்துத் தள்ளியதற்காகச் சிகிச்சை நிபுணருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரிசியா லீ சியன் என்ற 29 வயதுப் பெண்ணுக்குப் புதன்கிழமை (அக்டோபர் 28) 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
லீ, 2024ஆம் ஜனவரி மாதம் ‘ஆட்டிசம் ரெக்கவரி நெட்வொர்க் சிங்கப்பூர்’ நிறுவனத்தில் சிகிச்சை நிபுணராக வேலைக்குச் சேர்ந்தார்.
பிப்ரவரி மாதம், பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டிலேயே பாடம் கற்பிக்கும் பணி லீக்கு வழங்கப்பட்டது. சிறுவனின் பெற்றோர் அறையில் கண்காணிப்புப் படக்கருவியைப் பொருத்தியிருந்தனர்.
லீயை முழுமையாக நம்பியதால், சிறுவன் அடம் பிடித்தாலும் பெற்றோர் குறுக்கிடவில்லை.
இந்நிலையில், ஜூன் 13ஆம் தேதியன்று, லீ பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, சிறுவன் அமைதியின்றி நகரத் தொடங்கினான்.
பொருள்களைப் பிடுங்காமல் இருக்க, கைகளை மேசையின் மீது வைக்குமாறு லீ கூறினார். அதைக் கேட்காத சிறுவன் புத்தகத்தைப் பறிக்க முயன்றான். லீ புத்தகத்தை இழுத்தபோது, சிறுவன் அவரது முகத்தில் அடித்தான்.
இதனால் லீயின் மூக்குக்கண்ணாடி கீழே விழுந்தது. கண்ணாடியை மீண்டும் அணிந்த லீ, தனது இடது கையை முரட்டுத்தனமாக வீசினார். பின்னர் புத்தகத்தை எடுத்து மேசையிலும் சுவரிலும் வீசினார்.
சிறுவன் மீண்டும் இரண்டு முறை லீயின் முகத்தில் அடித்தான். அதனால் மீண்டும் கண்ணாடி கீழே விழுந்தது.
கோபமடைந்த லீ, சிறுவனின் கையைப் பிடித்து நாற்காலியிலிருந்து தரையில் இழுத்துத் தள்ளினார்.
சிறுவன் தன்னை அடித்ததாக அவனது தந்தையிடம் லீ கூறினார். பின்னர் கண்காணிப்புப் படக்கருவி பதிவுகளைப் பார்த்த சிறுவனின் தாய் காவல்துறையிடம் புகார் அளித்தார். லீயும் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
