பேங்காக்: பேங்காக்கின் மையப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற குலோங் தோம் வணிக மையத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நிகழ்ந்த தீ விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். ஏறத்தாழ 300 கடைகள் தீக்கிரையாகின.
இடிபாடுகளுக்கு இடையே இருந்து நெருப்பு மீண்டும் பற்றி எரிவதைத் தடுக்கத் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து வருகின்றனர். கட்டடம் மேலும் இடிந்து விழும் ஆபத்து இருப்பதால் பொறியாளர்களின் ஆய்வுக்குப் பிறகே இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களில் ஒருவர் உட்பட மேலும் 10 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
காற்றின் வேகத்தால் புகை கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாட் சாகெட் பகுதியை நோக்கி நகர்வதால், அப்பகுதி மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பேங்காக் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபுன்ட் கேட்டுக்கொண்டுள்ளார்.
விபத்து நடந்த வணிக மையத்தில் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பேட்டரிகளும், கட்டடத்தின் முன்பகுதி அமைப்பும் தீயை விரைவாகப் பரவச் செய்து, தீயணைப்புப் பணிகளுக்கு கடும் சவாலாக அமைந்தது.
தரைத் தளத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிறப்புப் பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க முயல்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.


