பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் அனைத்துலக விமான நிலையத்தின் சரக்குகள் வைக்கப்படும் கட்டடத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 18) பிற்பகல் 2.30 மணியளவில் தீ மூண்டது. அதனால் அங்கு அனைத்து விமானச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பங்ளாதேஷ் உள்ளூர் நாளிதழ் ‘டெய்லி ஸ்டார்’ இதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
தலைநகரின் 36 தீயணைப்புப் பிரிவுகளும் தீயை அணைக்க போராடி வருகின்றன என்று தீயணைப்பு, குடிமைத் தற்காப்பு ஊடகக் குழுவின் அதிகாரி டல்ஹா பின் சயிம் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக உள்ளன. மேல்விவரங்கள் தேவைப்படும்போது வெளியிடப்படும் எனவும் ஹஸ்ரத் ஷாஜலால் விமான நிலைய அதிகாரி தெரிவித்ததாக அறியப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் ஊடகம் அந்தச் செய்தி அறிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை. பங்ளாதேஷின் விமான நிலையம் உடனடியாக எந்தக் கருத்தையும் தரவில்லை எனவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பங்ளாதேஷின் கடற்படை, ஆகாயப் படை இரண்டும் தீயை அணைக்கும் முயற்சிகளில் இணைந்துள்ளதாக அரசாங்கச் சேவைகளுக்கு இடையிலான மக்கள் தொடர்புப் பிரிவு (ISPR) தகவல் அளித்துள்ளது.
டாக்காவுக்குச் செல்லவிருந்த சில விமானங்கள், சட்டோகிராம் நகரில் உள்ள ஷா அமாநாட் அனைத்துலக விமான நிலையத்துக்குப் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளன என்று பங்ளாதேஷ் ஊடகமான ‘சோமொய்’ அதன் இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.