ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகில் உள்ள சமையல் எண்ணெய்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரிய அளவிலான தீயில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.
தீயை அணைக்க கிட்டத்தட்ட 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளதாகவும் தொழிற்சாலையின் பல பகுதிகளில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘பெக்காசி’ நகரில் அமைந்துள்ள அந்தத் தொழிற்சாலையின் நடுவில் உள்ள கட்டடத்திலிருந்து பெரிய அளவில் தீயும் கரும்புகையும் வெளிவருவதை ‘மெட்ரோ டிவி’ படங்கள் காட்டின.
தொழிற்சாலையைச் சுற்றி சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து அனைத்துச் சடலங்களும் கொண்டுசெல்லப்பட்டு விட்டதாக ‘பெக்காசி’ தீயனைப்புத் துறைத் தலைவர் சுஹார்தோனொ கூறினார். மேலும் மூவர் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார்.
மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
உள்ளூர் அதிகாரிகள் தீ ஏற்பட்டதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
அந்தத் தொழிற்சாலையை ‘பிடி ப்ரிஸ்கோலின் (PT Priscolin) நிறுவனம் நடத்திவருவதாக உள்ளூர் தீயணைப்புத் துறையில் பணிபுரியும் அதிகாரி மஸ்வா ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.