புக்கெட் தீவில் மோட்டார்சைக்கிள் வாடகைக் கடையில் தீ; 11 பேர் உயிரிழப்பு

புக்கெட் தீவில் மோட்டார்சைக்கிள் வாடகைக் கடையில் தீ; 11 பேர் உயிரிழப்பு

படம்: த நேஷன்/ஏசியா நியூஸ் நெட்வொர்க்

16 Nov 2026 - 12:51 pm

2 mins read

புக்கெட்: தாய்லாந்தின் புக்கெட் தீவில் உள்ள பாத்தோங் பகுதியில் அமைந்துள்ள மோட்டார்சைக்கிள் வாடகை, விற்பனை கடையில் திங்கட்கிழமை (நவம்பர் 16) அதிகாலை ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

அதோடு, 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதிக அளவில் புகையைச் சுவாசித்ததே பெரும்பாலான மரணங்களுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. காயமடைந்த 36 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

‘காத்து’ மாவட்டத்தின் பாத்தோங் பகுதியில் உள்ள ‘பாங் முவாங் சாய் கோர்’ சாலையில் அமைந்துள்ள அந்தக் கடையில் அதிகாலை 3.15 மணி அளவில் தீ ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.

கட்டடம் முழுவதும் அதிவேகமாகப் பரவிய தீ, அதன் இருபுறத்திலும் இருந்த அருகிலுள்ள கட்டடங்களுக்கும் பரவியது.

ஐந்து வர்த்தகக் கடைகளும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில மோட்டார்சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளது.

பாத்தோங் நகராட்சியின் பேரிடர் தடுப்பு, தணிப்புப் பிரிவைச் சேர்ந்த தீயணைப்பாளர்களும் ‘குசோல்தார்ம்’ புக்கெட் அறநிறுவனத்தின் மீட்புத் தொண்டூழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாத்தோங் மருத்துவமனையின் அவசர மருத்துவ வாகனங்களும் அங்கு அனுப்பப்பட்டன.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அருகிலுள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவித்தன.

மின்கம்பத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்கள்மீது தீப்பொறிகள் விழுந்து, அங்கிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் தீப்பிடித்ததால், தீ அதிவேகமாகப் பரவியிருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், மின்கோளாறுதான் விபத்திற்குக் காரணமா என்பதைப் புலனாய்வாளர்கள் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்