இரவுக் கேளிக்கை விடுதியில் தீ; 51 பேர் உயிரிழப்பு

1 mins read
9c8531e2-dd6d-49a7-bf22-6314caadc49b
கட்டடம் முழுவதுமே தீயின் பிடியில் சிக்கியிருந்ததைச் சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டின. - படம்: சமூக ஊடகம்

ஸ்காப்ய (வடக்கு மேசடோனியா): ஐரோப்பிய நாடான வடக்கு மேசடோனியாவில் இரவுக் கேளிக்கை விடுதியில் நேர்ந்த தீ விபத்தில் குறைந்தது 51 பேர் மாண்டுவிட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தலைநகர் ஸ்காப்யவிலிருந்து கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோச்சனி நகரில் அமைந்துள்ள ‘பல்ஸ் கிளப்’ என்ற அந்தக் கேளிக்கை விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) அதிகாலை 3 மணியளவில் தீப்பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

அக்கட்டடம் முழுவதுமே தீயின் பிடியில் சிக்கியிருந்ததைச் சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டின.

வடக்கு மேசடோனியாவின் ‘ஏடிஎன்’ எனும் புகழ்பெற்ற இசைக்குழுவின் நிகழ்ச்சி அங்கு நடந்துகொண்டிருந்தபோது அங்கு தீப்பற்றியதாகக் கூறப்பட்டது.

அந்த இசை நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய 1,500 பேர் திரண்டிருந்தனர்.

வாணவேடிக்கைக் கருவிகளைப் பயன்படுத்தியதால் தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்