பேங்காக்: தாய்லாந்தின் பட்டாயா நகரில் உள்ள ‘ஜேஏ பிளஸ்’ ஹோட்டலில் மூண்ட தீயில் நால்வர் காயமுற்றனர்.
வியாழக்கிழமை (மே 21) உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்குத் (சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணி) தீ மூண்டது. நெருப்புப் பற்றியபோது, ஹோட்டலுக்குள் பலர் சிக்கியிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடினர். மீட்புக் குழுவினர், கட்டடத்திற்குள் இருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியே அழைத்துவரும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டனர்.
தீ ஒரு மணிநேரத்திற்குள் அணைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.
சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வெளியேற்றப்பட்டனர். புகையைச் சுவாசித்ததால் சிலருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்பட்டது.
தீ மூண்டபோது, ஹோட்டலின் 178 அறைகளிலும் பலர் தங்கியிருந்ததாகக் கூறப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள்.
முதலில் மேல் மாடியில் மட்டும் நெருப்பு மூண்டதாகவும் பின்னர் அது வேகமாய்ப் பரவியதாகவும் அதிகாரிகள் கூறினர். தீயணைப்பு வீரர்கள் கடும்போராட்டத்திற்குப் பிறகு, நெருப்பைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
காயமுற்ற நால்வருக்கும் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

