கோரோன்: பிலிப்பீன்ஸ் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த பயணிகளின் உடல்கள், செப்டம்பர் 12ஆம் தேதி காலை பலவான், கோரோன் சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள துறைமுகத்திற்கு வந்தடைந்தன.
மேலும், 35 ஆக உள்ள உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டின் கடலோரக் காவல்படை எச்சரித்துள்ளது.
சுற்றுலாத் தலத்திற்கு அருகே தரைதட்டிய படகிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 30 சடலங்களைப் பெறுவதற்காகக் கூடாரங்கள் அமைக்கப்படுவதை ‘ஏஎஃப்பி’ செய்தி நிறுவனம் பார்த்தது.
செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை இந்தப் படகில் திடீரென மூண்ட தீ, சில நொடிகளில் படகு முழுவதும் பரவியது.
சடலங்களைக் கொண்டு செல்லும் ரோந்துக் கப்பலின் கொள்ளளவு காரணமாக முதல் கட்டமாக 30 சடலங்கள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள சடலங்கள் படகிலேயே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட உடனே, மற்ற ஐந்து பேர் உயிரிழந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்த மீட்புப் படையினருக்கு அருகில், சிறிய கப்பலில் சடலங்கள் வைக்கப்பட்ட பைகள் வரிசையாக வைக்கப்படுவதைக் கடலோரக் காவற்படை வெளியிட்ட புகைப்படங்களில் காண முடிந்தது.

