சோல்: தென்கொரியாவின் பூசான் நகரில் இருக்கும் கட்டுமானத் தளம் ஒன்றில் மூண்ட தீயில் குறைந்தது அறுவர் உயிரிழந்தனர், குறைந்தது 25 பேர் காயமுற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரான பூசானில், பன்யான் குழுமத்தின் ஹோட்டல் கட்டுமானத் தளத்தில் வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 14) இச்சம்பவம் நேர்ந்தது. அப்போது சம்பவ இடத்தில் ஊழியர்கள் பலர் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை 10 மணி) சற்று நேரத்துக்கு முன்பு கிஜாங்-குன் பகுதியில் உள்ள முழுமையாகக் கட்டிமுடிக்கப்படாத பன்யான் ட்ரீ ஹோட்டலில் தீ மூண்டதாக தென்கொரிய தேசிய தீயணைப்பு அமைப்பு தெரிவித்தது. தீ மூண்டு ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர்.
ஹோட்டலின் 12வது தளத்தில் சிக்கியிருந்தோர் ஹெலிகாப்டர்களின் மூலம் மீட்கப்பட்டனர். அங்கு அறுவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது; அந்த அறுவரும் மரணமடைந்தது பிற்பகலில் உறுதிசெய்யப்பட்டது.
புகையை நுகர்ந்ததால் 25 பேருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது. கட்டடத்தின் கூரையில் மேலும் 14 பேர் காப்பாற்றப்பட்டனர். கட்டடத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.34 மணிக்குள் தீ பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பிறகு அதிகாரிகள் கட்டடத்திற்குள் தேடல் பணிகளை மேற்கொண்டனர்.
சிங்கப்பூர் நேரம் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணி நிலவரப்படி, கட்டுமானத் தளத்தில் மொத்தம் எத்தனை ஊழியர்கள் இருந்தனர் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று தீயணைப்பு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தீயை அணைக்க சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் பணியில் ஈடுபடுத்தி தேவையான கருவிகளைப் பயன்படுத்த தென்கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சாங் மொக் உத்தரவிட்டார் என்று அந்நாட்டின் நிதி அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
“தேடல், மீட்புப் பணிகளின்போது உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை, தீயணைப்பாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார் திரு சோய்.
அண்மையில் தென்கொரியாவின் கிம்ஹே அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் பூசான் விமானம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது. அந்த விமானத்திலிருந்து 176 பேரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
எழுவர் காயமுற்ற அச்சம்பவம் நிகழ்ந்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த ஹோட்டல் கட்டுமானத் தளத் தீச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

