சோல்: கரப்பான்பூச்சியைக் கொல்வதற்காக அண்டைவீட்டார் வைத்த தீயானது 30களில் இருந்த ஒரு பெண் உயிரிழக்கக் காரணமாகிப் போனது.
இறப்பதற்குமுன் அப்பெண் தம்முடைய கைக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தென்கொரியாவின் கியூங்கி மாநிலம், ஓசான் நகரிலுள்ள ஐந்து தள வணிக, குடியிருப்புக் கட்டடத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 20) நேர்ந்தது.
அக்கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தீமூட்டியையும் (lighter) வளிமக் கரைசலையும் (aerosol) கொண்டு ஒரு கரப்பான்பூச்சியைக் கொல்ல முயன்றார். அம்முறையை அவர் யூடியூப் காணொளிவழி அறிந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர் மூட்டிய தீ கட்டுக்கடங்காமல் விரைந்து பரவியது.
அதனால், அக்கட்டடத்தில் இருந்தவர்கள் தீயிலிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியேற முயன்றனர்.
அவ்வகையில், ஐந்தாம் தளத்தில் குடியிருந்த இணையர் இருவர், தங்களது இருமாதக் கைக்குழந்தையுடன் அருகிலிருந்த ஒரு கட்டடத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றனர். அதற்கும் தீப்பற்றிய கட்டடத்திற்கும் ஒரு மீட்டர் இடைவெளிகூட இல்லை எனக் கூறப்படுகிறது.
சன்னல் வழியாக அடுத்த கட்டடத்தில் இருந்தோரிடம் குழந்தையை ஒப்படைத்தபின் அதன் தந்தை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறினார். ஆனால், அக்குழந்தையின் தாய் தவறி விழுந்து கடுமையாகக் காயமுற்றார். உடனடியாக அருகிலிருந்து அஜோ பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் காலை 10.40 மணியளவில் உயிரிழந்தார்.
தீயினால் கிளம்பிய புகையால் மூச்சுவிடச் சிரமப்பட்ட எண்மருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீயணைப்பாளர்கள் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவசரகாலப் படிக்கட்டுப் பகுதியைப் புகை சூழ்ந்திருந்ததால், அதனால் குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, அவ்விணையர் படிக்கட்டு வழியாகத் தப்பிக்க முயலவில்லை என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, தீ மூட்டிய குடியிருப்பாளர்மீது கைதாணை பிறப்பிக்கப்பட வேண்டுமெனக் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

